திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதி ராஜன் திருக்கோயில்

திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதி ராஜன் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில் தேரழுந்தூரில் அமைந்துள்ள 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்று.
சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி உயர மூலவர் கொண்ட திருத்தலம்.திருமணத் தடை நீக்கும் திருத்தலமாகக் கூறப்படுகின்றது.
தலவரலாறு
பெருமாளும் சிவபெருமானும் சொக்கட்டான் ஆடிய போது பார்வதிதேவியை நடுவராக நியமித்ததில், காய் உருட்டும் போது சகோதரனான பெருமாளுக்குச் சாதகமாகக் கூற, சிவபெருமான் பார்வதி தேவியைப் பசுவாக மாற சாபமிட, அவருக்குத் துணையாகச் சரஸ்வதி தேவியும் லட்சுமி தேவியும் பசுவாகி பூமிக்கு வந்த போது மேய்ப்பவராகப் பெருமாள் ’ஆ’மருவியப்பன் எனும் பெயரில் வந்த திருத்தலம்.
கோயில் அமைப்பு
வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் வலதுபுறம் கம்பர் சன்னதியில் கம்பரும் அவருடைய மனைவியும் உள்ளனர். அடுத்து ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. அருகே பலிபீடம், கொடி மரம் உள்ளன. அடுத்துள்ள கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது திருச்சுற்றில் வலது புறத்தில் தேசிகர் மடப்பள்ளி, ஆழ்வார் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. இடது புறம் ஆண்டாள் சன்னதி உள்ளது.

சற்று உயர்ந்த தளத்தில் மூலவர் தேவாதி ராஜன் நின்ற நிலையில் கிழக்கு நோக்கி உள்ளார். இடது புறம் கருடாழ்வாரும், வலதுபுறம் பிரக்லாதாழ்வாரும் உள்ளனர். இடது கையில் ஊன்றிய கதை உள்ளது. இடது புறம் காவிரித்தாய் மண்டியிட்ட நிலையில் உள்ளார். கோயிலின் எதிரே குளம் உள்ளது. பெரிய திருமொழி ஏழாம் பத்து ஐந்தாம் திருமொழி கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு
மார்க்கண்டேய முனிவர் வழிபட்ட திருத்தலம். மூலஸ்தானத்தில் பெருமாளுடன் பிரகலாதனும் கருடனும் உள்ளனர்.
1953ல் இந்த கோயிலின் தேர் தீவிபத்தில் அழிந்துவிட்டது. 53 ஆண்டுக்குப் பின்னர் 2005ல் ஊர்மக்கள் புதிய தேரை உருவாக்கி தேரோட்டம் நடத்தினர்.
Patrikai.com official YouTube Channel