சென்னை:

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைவை தொடர்ந்து காலியாக இருந்த திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆனால், திருவாரூர் தொகுதியில்  கஜா புயல் பாதிப்பு நிவாரண பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இடைத்தேர்தல் அறிவிப்பு அரசியல் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குகளும் பதியப்பட்டன.

இதுகுறித்து ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட நிலையில், திருவாரூர் மாவட்ட கலெக்டரான தேர்தல் அலுவலர்  அனைத்துக்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்தார்.

வருகிற 28-ந் தேதி நடைபெற இருந்த நிலையில் இன்று காலை, இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது.  இந்த நிலையில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

அதிமுக:

திருவாரூர் தேர்தலை அதிமுக இன்முகத்துடன் வரவேற்க தயாராக இருந்தது. ஆனால், தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது  ஏமாற்றமளிக்கிறது என்று தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

திமுக:

திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக மற்றும் பாஜக கட்சிகளின் நடவடிக்கைகளை பார்த்தபோதே  தேர்தல் ரத்தாகும் என முன்கூட்டியே கணிக்க முடிந்தது என திருவாரூர் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூண்டி கலைவாணன்  கூறி உள்ளார்.

காங்கிரஸ்:

மத்திய அமைச்ச்ரபொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தமிழிசை ஆகியோர் முதல்வர் எடப்பாடியை  சந்தித்தபோதே திருவாரூர்  தேர்தல் ரத்து முடிவாகிவிட்டது என்ற காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்,  திருவாரூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது என்றார்.

கம்யூனிஸ்டு:

திருவாரூரில் தேர்தலை ஒத்திவைக்க மாவட்ட தேர்தல் அதிகாரி நடத்திய கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின. கஜா புயல் நிவாரணப் பணிகள் முடியாததால் தேர்தலை ஒத்தி வைக்க கோரப்பட்டது. ஆனால், பாஜக உள்நோக்கத்துடன் இடைத்தேர்தலை அணுகியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறினார்.

பாஜக:

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை ரத்து செய்தது சரியான நடவடிக்கையே என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறி உள்ளார். மேலும்,. புயலுக்குப்பின்பு அங்கே தங்கி மருத்துவ நிவாரண பணி செய்த அனுபவத்தில் சொல்கிறேன் திருவாரூர் மக்களுக்கு இப்போதைய தேவை தேறுதல் தான், தேர்தல் அல்ல,அவர்கள் வாழ்வை மீட்டெடுப்பதுதான் தேவை, ஓட்டெடுப்பு அல்ல,தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. சில கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்க காட்டிய வேகத்தை நிவாரண பணிகள் செய்வதற்கு காட்டவில்லை, டோக்கன் கொடுத்து ஓட்டு வாங்க காத்திருந்த ஊழல் கட்சிகளுக்கு வேண்டுமானால் தேர்தல் நடக்காதது ஏமாற்றம் அளிக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளார்.

விடுதலை சிறுத்தைகள்:

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

பாஜக:

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை ரத்து செய்தது சரியானது என  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அமமுக:

தேர்தல் ரத்து அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக திருவாரூர் தொகுதியில் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ். காமராஜ்  கூறினார். இடைத்தேர்தல் திட்டமிட்டு ரத்து செய்யப்பட்டுள்ள தாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சி:

மத்திய – மாநில அரசுகள் திட்டமிட்டு தேர்தலை ரத்து செய்துள்ளன என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாகுல் அமீது கூறினார்.

இவ்வாறு அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.