திருவாரூர்: உலகப்புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கண்ககான பக்தர்கள் தேரின் வடத்தை பிடித்து, ஆரூரா தியாகேசா கோஷத்துடன் இழுக்க ஆழித்தேடி ஆடி அசைந்தாடி வந்துகொண்டிருக்கிறது.
இன்று திருவாரூர் தேரோட்டத்தை முன்னிட்டு, அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தேர்த்திருவிழாவையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்து.
திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு, கடந்த பிப்ரவரி 11ம் தேதி தியாகராஜசுவாமி கோயிலிலிருந்து திருஞானசம்பந்தர் எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் பந்தகால் முகூர்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மார்ச் 15ந்தேதி திருவிழழ கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான இன்று (ஏப்ரல் 7ம் தேதி) பங்குனி தேரோட்டம் விமர்சையாக நடைபெற்று வருகிறது. முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அஜபா நடனத்துடன் தியாகராஜர் கோவிலில் இருந்து புறப்பட்டு, தேரில் எழுந்தருளினார். பின்னர், இன்று காலை பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.
திருவாரூர் தியாகராசரின் பங்கு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டத்தையொட்டி, இன்று அதிகாலை 5.30 மணிக்கு விநாயகர், முருகன் தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆழித் தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன், போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஆழித்தேரோட்டத்தை தொடர்ந்து அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் இழுக்கப்பட்டன.
இந்த ஆழித்தேரில் சுமார் 425 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டு இருந்த 4 வடங்களை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆரூரா.. தியாகேசா… பக்தி கோஷம் விண்ணதிர பிடித்து இழுத்து சென்றனர்.
தேரின் முன்பாக சிவனடியார்கள் பஞ்ச வாத்தியங்களை இசைத்தவாறும், தேவார திருமுறைகள் ஓதியவாறும் வீதிஉலா சென்றனர். ஆழித்தேரானது கீழ வீதியில் இருந்து புறப்பட்டு, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக இழுத்து வரப்பட்டு மாலை நிலையை அடையும். அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைப்பெறுவது வழக்கம்.
ஆழித்தேரோட்டதை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட் தலைமையில், 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 17 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 50 இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தீயணைப்பு துறையினர், நடமாடும் மருத்துவ குழுவினர் உள்ளிட்டோரும் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பக்தர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டு இருந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.