திருத்தளிநாதர் கோவில், சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் அமைந்துள்ளது.
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன், தலம் தோறும் எழுந்தருளி, தம்மை நாடி வருவோருக்கு அருள்பாலித்து வருகிறான். அத்தகைய அருள் சுரக்கும் ஆலயங்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஸ்ரீ திருத்தளிநாதர் ஆலயம். திருத்தளிநாதர் இங்கு எழுந்தருள முக்கியக் காரணம் ஸ்ரீ மகாலட்சுமி ஆவார்.
இத்தலத்திலுள்ள பைரவர் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருப்பத்தூர் திருத்தளிநாதர் திருக்கோவில் ஆலய பைரவர் பெயரில் வைரவன் கோவில் என்றே இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தின் 2-வது பிரகாரத்தில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் ஸ்ரீயோகபைரவர் தரிசனம் தருகிறார். குழந்தை வடிவில், வலக்கரத்தில் பழம், இடக்கரம் தொடையின் மீது வைத்துக்கொண்டு கோரைப் பற்களுடன் காட்சி தருகிறார்.
உலகில் தோன்றிய முதல் பைரவ மூர்த்தம் இதுதான் என இவ்வாலயக் குறிப்பு கூறுகின்றது. இங்குள்ள பைரவர் “ஆதி பைரவர்” என்றே அழைக்கப்படுகின்றார். பொதுவாக பைரவர் கையில் சூலத்துடனும், நாய் வாகனத்துடனும், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே மரபு. ஆனால் இங்குள்ள பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில் காணப்படுகின்றார். அதனால் “யோக பைரவர்” என்று அழைக்கப்படுகின்றார்.
இந்திரன் மகன் ஜெயந்தனைக் காப்பதற்காக இவர் திரு அவதாரம் செய்ததாகக் கோவில் குறிப்பு கூறுகின்றது. இந்திரன் மகன் ஜெயந்தன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுப் பேறடைந்தான். ஆதலின் அவன் உருவம் சந்நிதிக்கு வெளியில் வாயிலில் உள்ளது. சஷ்டி, அஷ்டமி நாட்களில் பைரவருக்கு சிறப்பு ஆராதனை, அபிஷேகம், வழிபாடு, யாகங்கள் செய்யப்படுகின்றன.
குடும்பம் செழிக்க, செய்த பாவத்திற்கு மன்னிப்பு கிடைக்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.