திருப்பாவை – பாடல் 6 – விளக்கம்

மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும்.  இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும். அதிலும் திருமணம் ஆகாத பெண்கள் மார்கழியில் திருப்பாவை பாடுவது என்பது மிகவும் விசேஷம். அது அவர்களுக்கு நல்ல கணவனை பெற்றுத் தரும்.

அந்தவகையில், மார்கழி மாதத்தின் 6 ஆம் நாள் பாடவேண்டிய திருப்பாவை பாடல் 6.

திருப்பாவை பாடல் 6

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி

வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

பொருள்:

பெண்ணே பறவைகள் எல்லாம் கூவத் தொடங்கி விட்டன, பறவைகளுக்கு அரசனான கருடனுக்கு இறைவன் நம் பெருமாள் எழுந்தருளியுள்ள திருக்கோவிலிலிருந்து வெண்சங்கு முழங்கும் ஓசை உன் காதில் விழவில்லையா? நம் கண்ணன் வஞ்சனையால் வந்த பேய்ச்சியான பூதனை மார்பில் தடவிய நஞ்சை உண்ட மாயவன். கஞ்சன் அனுப்பிய சகடாசுரனை எட்டி உதைத்து மாள வைத்த திருவடிகளையுடையவன். பாற்கடல் அலை மேலே பாம்பணையில் பள்ளி கொண்ட பரந்தாமன், உலகுக்கெல்லாம் வித்தானவன்.அந்த பரமனை உள்ளத்தே கொண்டு முனிவர்களும், யோகிகளும் மெள்ள எழுந்து “ஹரி”,” ஹரி” என்று ஓதுகின்றனரே அந்த பேரொலி உள்ளம் புகுந்து எங்களை குளிரவைக்கின்றது, உன்னை குளிர வைக்கவில்லையா? சிறு பிள்ளையாய் இருக்கின்றாயே! எழுந்து வா