திருப்பாவை –ஏழாம் பாடல்

ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார்.   இந்த 30 நாட்களும் அவர் தன்னுடன் நோன்பு இருக்க தனது தோழிகளை அழைப்பது போல் பாடிய பாடல்கள் திருப்பாவை ஆகும்.

இன்று நாம் திருப்பாவை ஆறாம் பாடலைக் காண்போம்

திருப்பாவை 7 :

கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்பெண்ணே!
காசும்பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ!
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!

 

பொருள் :

ஆனைச்சாத்தன் எனப்படும் வலியன் குருவிகள் தங்களுடன் சேர்ந்து ‘கீச் கீச் ‘ என்று பேசும் ஒலி கேட்கவில்லையா ?அறிவில்லாதவளே !

வாசனை மிகுந்த கூந்தலுடைய இடையர் குலப் பெண்கள் கைகளை அசைத்து மத்தினால் தயிர் கடையும் ஓசையும்,அப்போது அவர்கள் கழுத்தில் அணிந்த அச்சுத்தாலியும் ஆமைத்தாலியும் இணைந்து எழுப்பும் ஒலியும் இன்னுமா கேட்கவில்லை?

தலைமைப் பண்பைப் பெற்ற பெண்ணே !

நாங்கள் நாராயணனான,கேசி என்னும் அரக்கனைக் கொன்ற கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் விழுந்தும்,இன்னும் உறங்குகிறாயே !

பிரகாசமான முகத்தைக் கொண்டவளே !

உன் வீட்டுக்கதவைத் திற! நாராயணனை ஏற்று,அவனை அறிந்து கொள்வாய் பெண்ணே !