திருப்பாவை – இரண்டாம் பாடல்

 

ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார்.   இந்த 30 நாட்களும் அவர் தன்னுடன் நோன்பு இருக்க தனது தோழிகளை அழைப்பது போல் பாடிய பாடல்கள் திருப்பாவை ஆகும்.

இன்று நாம் திருப்பாவை இரண்டாம் பாடலைக் காண்போம்

திருப்பாவை 2 :

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்!

 

பொருள் :

உலகில் வாழ்பவர்களே !நாம் நம் பாவை நோன்புக்கு செய்ய வேண்டிய காரியங்களைக் கேளுங்கள் !

பாற்கடலில் மென்மையாக உறங்கும் பரமனின் திருவடிகளைப் புகழ்ந்து பாடுவோம்.
இந்த நாட்களில்,நெய் உண்ணக் கூடாது.பால் உண்ணக் கூடாது.
அதிகாலையில் நீராட வேண்டும்.
கண்ணுக்கு மைத் தீட்டக்கூடாது.
கூந்தலில் மலர் சூடக்கூடாது.
செய்யத் தகாத செயல்களைச் செய்ய மாட்டோம்.
கோள் சொல்லுதல்,பொய் பேசுவது போன்ற பேசத் தகாத வார்த்தைகளைப் பேசக்கூடாது.
நம்மால் முடிந்தவரை தர்மமும்,பிச்சையும் செய்வோம்.

இப்படி உயிர் வாழும் வழியை எண்ணி,மகிழ்ந்து,கேட்டு நினைவில் நிறுத்திக் கொள்வோம்!