திருப்பாவை –17 ஆம் பாடல்

ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார்.   இந்த 30 நாட்களும் அவர் தன்னுடன் நோன்பு இருக்க தனது தோழிகளை அழைப்பது போல் பாடிய பாடல்கள் திருப்பாவை ஆகும்.

இன்று நாம் திருப்பாவை 17 ஆம் பாடலைக் காண்போம்

திருப்பாவை 17 :

அம்பரமே, தண்ணீரே, சோறே, அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா, எழுந்திராய்!
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குல விளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்
அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்!
செம்பொற் கழலடி செல்வா! பலதேவா!
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்!

பொருள் :

உடுக்க உடை,குடிக்கத் தண்ணீர்,உண்ண உணவு ஆகியவற்றைத் தேவையான அளவுக்குத் தானம் செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபாலா !எழுந்திருங்கள்!

நம் ஆயர்குலப் பெண்கள் அனைவருமே முல்லைக்கொடிபோன்றவர்கள்.

அவர்களில் கொழுந்தைப்போன்ற மென்மையான தேகம் படைத்த,முதன்மையானவளே!எங்கள் குலம் செழிக்க வந்த குலவிளக்கே !யசோதை தாயே !எங்கள் கஷ்டத்தை உணர்ந்து நீங்கள் எழ வேண்டும் !

விண்ணுக்குள் ஊடுருவி அதைக் கிழித்து,தன் திருவடிகளை ஓங்கி உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே! நீ உறங்காமல் கண் விழிக்க வேண்டும்!

செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத்திருமகனான பலராமனே!
நீயும், உன் தம்பியான கண்ணனும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்குத் தரிசனம் தர வேண்டும்!

ஆண்டாளும் அவர் தோழிகளும் கேட்டுக் கொண்டபடி காவலன் நந்தகோபாலனின் அரண்மனை வாசல் கதவை திறக்கிறான்.  அவர்கள் உள்ளே சென்று நந்தகோபாலன், யசோதை, கண்ணன், பலராமன் அனைவரையும் துயில் எழுப்ப முயல்கிறார்கள்.