மதுரை:  உயர்நீதிமன்றம் அனுமதியுடன்  இன்று திருப்பரங்குன்றத்தில் உள்ளூர் மக்கள் சார்பாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி,  இன்று உண்ணாவிரத போரட்டம் தொடங்கியுள்ளது.

இந்த போராட்டம், திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே காலை 9மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தபோராட்டம் மாலை 5மணி வரை நடைபெற உள்ளது.

ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற  வலியுறுத்தி  திருப்பரங்குன்றம் மற்றும் ஹார்விப்பட்டி பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முன்பு பெண்கள் தீபம் ஏற்றினர். மேலும்,  தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென அவர்கள் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.  இதைத்தொடர்ந்து  இன்று திருப்பரங்குன்றம் பகுதியில் மக்கள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி உண்ணாவிரதம் இருக்க அனுமதித்து மதுரை உயர் நீதிமன்ற கிளை நேற்று அனுமதி அளித்த நிலையில், இன்று ஊர்மக்கள் சார்பாக உண்னாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது. முன்னதாக இந்த போராட்டத்திற்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபு, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தார்.

அவரது மனுவில்,  மதுரை திருப்பரங்குன்றம் மலை வரலாறு மிகவும் பழமையானது. திருமுருகாற்றுப்படை, பரிபாடல், அகநானூறு, மதுரைக்காஞ்சி, கலித்தொகை, தேவாரம் உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவில், குகைக்கோவிலாக பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை உறுதிப்படுத்துகின்றன. எனவே திருப்பரங்குன்றம் முருகன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பது உறுதியாகிறது. 1926-ம் ஆண்டு இங்கு சிவில் பிரச்சினை எழும் வரை அந்த மலையின் மீது உள்ள தீபத்தூண் பகுதியிலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது. அந்த நடைமுறையை பின்பற்றி இந்த ஆண்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை பின்பற்றி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.

எனவே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத்தை ஏற்ற வலியுறுத்தி அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த முடிவு செய்து, இதற்காக அனுமதி கேட்டோம். ஆனால் போலீசார் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். இது ஏற்கத்தக்கதல்ல. எனவே வருகிற 13 ஆம் தேதி (இன்று) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசரித்த நீதிமன்றம், மனுதாரர் கோரும் இடத்திலேயே 50 பேர் மட்டும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ளலாம். தனி நபர்களையோ, அரசியல் கட்சியினரையோ தாக்கும் வகையில் பேசக்கூடாது. கட்சி கொடிகளை பயன்படுத்தக்கூடாது. ஒரேயொரு மைக் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது” என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில் உயர் நீதிமன்ற நிபந்தனைகளின் படி, இன்று திருப்பரங்குன்றத்தில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது. இந்து முன்னணி அமைப்பு மற்றும் அப்பகுதி மக்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். உண்ணாவிரத போராட்டம் நடக்கும் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பரங்குன்ற தீப வழக்கில் காரசாரமான வாதங்கள்! வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு…

[youtube-feed feed=1]