திருநல்லம் உமாமகேஸ்வரர் சுவாமி ஆலயம்.

நாகப்பட்டினம் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் தூரத்தில்  சுமார் 1000 – 2000 வருடங்களுக்கு முன் மிகப் பழமை வாய்ந்த,  காவிரி தென்கரை தலங்களில் 34வது தலமாகவும்,  தேவாரப்பாடல் பெற்ற 274 தலங்களில் 97வது தலமாகவும்  உள்ளது

இங்கு வரகுணபாண்டியன் என்ற மன்னனுக்காக சிவனும் பார்வதியும் பஞ்சலோகத்தால் ஆன குழம்பைக் குடித்து, சுயம்பு மூர்த்தியாக நடராஜர் சிவகாமி அம்மனாகக் காட்சி கொடுத்துள்ளனர். மதுரை, உத்திரகோசமங்கை, கோனேரிராஜபுரம் ஆகிய இம்மூன்று தலங்களிலும் நடராஜருக்கு திருவீதியுலா கிடையாது.

 

பிரமாண்டமாக நடமாடும் இத்தல நடராஜருக்கு மனிதருக்கு இருப்பது போலவே ரோமம், மச்சம், ரேகை, நகம் ஆகிய அனைத்து அம்சங்களும் இருப்பது சிறப்பம்சமாகும். இப்பகுதி மக்களுக்கு நடராஜர் ஆலயம் என்றால் தான் தெரிகிறது.  16 சித்தர்கள் இங்கு வழிபாடு செய்துள்ளனர்.

மூன்று சண்டிகேஸ்வரர் உள்ளனர். பெருமாள் தாரை வார்த்துக் கொடுக்க  சிவ பார்வதி திருமணக்காட்சியை அகத்தியர் இங்குத் தரிசனம் செய்துள்ளார். பூமாதேவி இங்கு வழிபாடு செய்திருக்கிறாள். எனவே இத்தல இறைவனுக்குப் பூமிநாதர் என்ற பெயரும் உண்டு.

ஒரு முறை புரூரவஸ் என்ற மன்னனுக்கு குஷ்ட நோய் ஏற்பட்டது. இந்த நோயால் மிகவும் வருந்திய மன்னன், நோய் தீருவதற்காகப் பல திருத்தலங்கள் சென்று வழிபட்டான். கடைசியில் காவிரித்தென்கரையில் உள்ள இத்தலம் வந்து வழிபாடு செய்ததும் அவனுக்கு நோய் தீர்ந்தது.

மிகுந்த மகிழ்ச்சியடைந்த மன்னன் கோயிலுக்குக் காணிக்கையாக, சிவசன்னதி விமானத்தை பொன் தகட்டால் வேய்ந்தான். அத்துடன் வைகாசி விசாக தினத்தில் திருவிழா நடக்கவும் ஏற்பாடு செய்தான்