குழந்தை வரம் தரும் திருமூர்த்தி மலை
உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி மலை சுற்றுலாத்தலம் மட்டுமல்ல. இங்கு பிரம்மா, திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகள் குடிகொண்ட தலம் என்பதாலேயே திருமூர்த்தி மலை என அழைக்கப்படுகிறது. வரலாற்று சிறப்பு வாய்ந்த இக்கோயிலைச் சுற்றி அமைந்துள்ள வனப்பகுதியில் அகத்தியர் தவமிருந்ததாக ஐதீகம்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில் இங்கு பக்தர்கள் குவிந்து புனித நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்கின்றனர்.ஆடி, தை உள்ளிட்ட அமாவாசை நாளில் இங்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குடும்பத்துடன் வண்டி கட்டி வந்து முன்னோர்களுக்குத் திதி கொடுப்பது வழக்கம்.
உடலில் உள்ள மருகை அகற்றும் சக்தி அமணலிங்கேஸ்வரருக்கு உண்டு என்பது மக்களின் நம்பிக்கை. உடலில் மருகு உள்ளவர்கள் ஒரு துணியில் உப்பு, மிளகைக் கட்டி கோயிலுக்குப் பின்னால் உள்ள மருதம் மரத்தில் கட்டி விட்டு கோயிலை மும்முறை வலம் வந்து தரிசித்தால் மருகு உதிர்ந்து விடுமாம்.
அதே போல் குழந்தை பாக்கியத்துக்கும் இந்த கோயில் நம்பிக்கை தலமாக விளங்கி வருகிறது. குழந்தை வேண்டும் தம்பதிகள் வளர்பிறை ஞாயிற்றுக் கிழமைகளில் திருமூர்த்தி நதியில்(பாலாறு) குளித்து முடித்து ஈரத்துணியுடன் வடிகல் சாமிக்கு 3 குடம் தண்ணீர் அபிஷேகம் செய்து தேங்காய், பழம் வைத்து ஊதுபத்தி, கற்பூரம் கொளுத்தி வணங்க வேண்டும்.
இப்படி 12 வளர்பிறை நாளில் தரிசனம் செய்தால் அவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்யம் கிடைக்கும் என்பது ஐதீகம். குழந்தை வரம் நிறைவேறினால்  தொட்டில் கட்டி வைக்கின்றனர்
தலச் சிறப்பு
குழந்தை இல்லாதவர்கள் இத்தலத்தில் நீராடி சப்த கன்னி மார்களை வழிபட்டு பின் மும்மூர்த்திகளை வழிபட்டால் குழந்தை நிச்சயம் என்பது ஐதீகம்.
இது தவிர முகம் மற்றும் உடலில் மரு உள்ளவர்கள் இங்குள்ள தோணி ஆற்றில் நீராடி பின் அதில் உப்பு, மிளகு வாங்கி போட்டால் மரு நீங்கி விடும்.
இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளும் சிறிய குன்றில் சுயம்புவாக அருள்பாலிக்கின்றனர். இது ஒரு குடைவரைக்கோயிலாகும்.