சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது அம்மாவட்ட காவல்ஆணையராக இருந்த திருமலை உள்பட 4 அதிகாரிகளை  டிஜிபி  சைலேந்திரபாபு சஸ்பெண்டு செய்து உத்தர விட்டுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில்  ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின்போது,  அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக ஒருநபர் ஆணையம் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த ஆணையத்தின் அறிக்கை சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதையடுத்து, அந்த அறிக்கை சட்டப்பேரவையில் வைக்கப்பட்டது அதில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.  அதன்படி, அப்போதைய ஆட்சியாளர்கள், மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் போலீசார் வரம்புகளை மீது செயல்பட்டுள்ளனர் என்றும் காவல்துறை தலைமையின் அப்பட்டமான தோல்வி என்று விமர்சிக்கப்பட்டது.

போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் மிக அலட்சியமாக அணுகியுள்ளார் என்றும் குற்றசாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. டிஐஜி கபில்குமார் , எஸ்.பி. மகேந்திரன், துணை எஸ்பி லிங்கத் திருமாறன், ஆய்வாளர்கள் திருமலை ,ஹரிஹரன் ,பார்த்திபன், துணை ஆய்வாளர்கள் சொர்ணமணி ,ரெனென்ஸ் ,முதல் நிலை காவலர்கள் சங்கர் ,சுடலை கண்ணு, சதீஷ்குமார் , கண்ணன் , இரண்டாம் நிலை காவலர்கள் ராஜா ,தாண்டவமூர்த்தி, காவலர் மதிவாணன் உட்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்தபோது அம்மாவட்ட காவல் ஆய்வாளராக இருந்த திருமலை, தற்போது, நெல்லை மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார். . அவரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.  அத்துடன் சுடலைகண்ணு, சங்கர், சதீஷ் ஆகிய காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை எதிரொலியாக டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் .