திருமலை: நாளை இணையவழி கல்யாணோற்சவ டிக்கெட் வெளியீடு

Must read

திருமலை:
திருமலை திருப்பதி தேவஸ்தானம், இணையவழி கல்யாணோற்சவ டிக்கெட்டுகளை நாளை வெளியிட உள்ளது.

பொது முடக்க விதிமுறைகளின்படி ஏழுமலையான் கோயிலில் கடந்த மார்ச் முதல் ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏழுமலையானுக்கு சில முக்கிய சேவைகள் மட்டும் தனிமையில் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, ஆன்லைன் மூலம் கல்யாணோற்சவ டிக்கெட்டுகள் வெளியிட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
கல்யாணோற்சவத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் தேவஸ்தான இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்து கொண்டவர்கள் தேவஸ்தான பக்தி தொலைக்காட்சியில் (எஸ்விபிசி) நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் கல்யாண உற்சவத்தின்போது தங்கள் வீடுகளிலிருந்தே சம்பிரதாய உடைகள் அணிந்து, அர்ச்சகர்கள் சொல்லும் முறைகளைப் பின்பற்றி கல்யாண உற்சவத்தில் பங்கேற்கலாம். டிக்கெட் பெற்றவர்களின் முகவரிக்கு பிரசாதங்களை தேவஸ்தானம் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கும்.

நாளை முதல் 31ஆம் தேதி வரை கல்யாணோற்சவ டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும். இதற்கான முன்பதிவுகள் வியாழக்கிழமை (ஆக.6) காலை 10 மணிக்குத் தொடங்க உள்ளது. ரூ.1000 செலுத்தி பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை: முதலில் www.tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் லாக்ஆன் செய்ய வேண்டும். அதில் இணையவழி கல்யாண உற்சவம் என்ற பொத்தானை அழுத்தி, உற்சவத்தில் கலந்து கொள்ளும் இருவரின் பெயர்கள், வயது, பாலினம், கோத்திரம், மின்னஞ்சல் முகவரி, வீட்டு முகவரி, செல்லிடப்பேசி எண், உற்சவ தேதி உள்ளிட்டவற்றை பதிவு செய்ய வேண்டும். பின்னர் வங்கி டெபிட் அல்லது கிரெடிட் அட்டை மூலம் பணம் செலுத்தி தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்

More articles

Latest article