திருச்செந்தூர் :
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹார விழா சிறப்பாக நடைபெற்றது.
இன்று மாலை 4:30 மணியளவில் தொடங்கிய சூரசம்ஹார விழாவில், முருகப்பெருமான், யானை முகம் கொண்ட தாரகாசூரன், சிங்கமுகசூரன் ஆகியோரை வதம் செய்த பின், இறுதியாக சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக, உற்சவர மூர்த்தியான ஜெயந்திநாதர் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார், பின்னர் சூரனை வதம் செய்யும் வேல், பூஜைகள் செய்யப்பட்டு சஷ்டி மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் அலை கடலென தமிழகமெங்கும் இருந்து மக்கள் கூட்டம் சூரசம்ஹாரத்தை காண ‘அரோஹரா’ கோஷத்துடன் கூடும் நிலையில், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக பக்தர்களுக்கு நீடித்துவரும் தடையால் குறைவான அளவே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கடற்கரையில் வழக்கமான இடத்திற்கு பதில், கோயிலுக்கு அருகிலேயே வழக்கமான உற்சாகத்தோடு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சூரசம்ஹார நிகழ்ச்சியை ஒட்டி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.