லக்னோ: பிரக்யராஜில் நடைபெறும் கும்பமேளாவை காணும் வகையில் மூன்றாவது காசி தமிழ் சங்கமம் தேதிகள் மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி, இந்தாண்டு நடைபெற விருந்த காசி தமிழ்ச்சங்கமம் அடுத்த ஆண்டு ஜனவரி 19 முதல் 28 வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் வாரணாசியில் நடப்பாண்டு ( 2024 ஆம் ஆண்டு) 3வது ஆண்டாக நடைபெறவிருந்த காசி தமிழ் சங்கமம்-3, பிரயாக்ராஜின் கும்பமேளாவை தமிழர்கள் காணும் வகையில் வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 19 முதல் 28 வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உளளது.
உத்தரப்பிரதேசம் வாரணாசியுடன் தமிழர்களுக்கு உள்ள கலாச்சார தொடர்பை எடுத்துரைத்து வலுப்படுத்த ‘காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்தியஅரசு முன்னெடுத்து வருகிறது. காசியில் இந்த சங்கமத்தையும் மத்திய கல்வித் துறையுடன் இணைந்து வாரணாசி மாவட்ட நிர்வாகம் நடத்துகிறது.
முதல் தமிழ்ச் சங்கம் வாரணாசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது. இரண்டாவது தமிழ்ச் சங்கமம் வாரணாசி மாவட்ட ஆட்சியரான தமிழர் எஸ்.ராஜலிங்கம் யோசனையின்படி நமோ காட் கங்கைக் கரையில் நடைபெற்றது. காசி தமிழ் சங்கம் நடைபெற்றதை தொடர்ந்து கங்கையில் புதிதாக அமைத்த இந்த நமோ காட் ஒரு சுற்றுலா தலமாக வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும் இங்கு, அன்றாடம் சுமார் ஐந்தாயிரம் பேர் வருகை தருகின்றனர்.
எனவே, மூன்றாவது சங்கமமும் நமோ காட்டிலேயே நடைபெற உள்ளதால் இந்த சங்கமத்துக்கும் தமிழகத்தின் சென்னை, மதுரை,ராமேஸ்வரம் என பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் அழைத்து வரப்பட உள்ளனர். இவர்கள் வாரணாசியுடன், அயோத்யா மற்றும் பிரயாக்ராஜுக்கும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பல்வேறு வகை பிரிவினராக தமிழர்கள் இதில் கலந்து கொள்ள உள்ள நிலையில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பிறகு நேரில் மற்றும் இணையதளம் மூலமாக சங்கமத்துக்கான தமிழர்களை சென்னை ஐஐடி தேர்வு செய்ய உள்ளது.
முன்னதாக காசி தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சி கடந்த 2022ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. சுமார் ஒரு மாதம் நடைபெற்ற இந்த தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தனது மக்களவை தொகுதியான வாரணாசியில் தொடங்கி வைத்திருந்தார். அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு இரண்டாவது சங்கமமும் வாரணாசியில் நடைபெற்றது. இந்த காசி தமிழ் சங்கமும் இதுவரை குளிர் காலமான நவம்பர் மாதத்தில் நடைபெற்று வந்தது தமிழர்களுக்கு சிரமத்தை எற்படுத்தியது.
இதையடுத்து, தமிழக பக்தர்களின் நலனக்காகவும், அவர்கள் கும்பமேளாவை காணும் வகையில் தேதிகள் மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி, நடப்பாண்டுக்கான (2024) காசி தமிழ்• சங்கமம் நிகழ்ச்சி அடுத்த ஆண்டு கும்பமேளாவை அனைவரும் காணும் வகையில் ஜனவரியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான முழு ஏற்பாடுகள் குறித்த கானொளி கூட்டம் நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் சில துறைகளும் உதவ உள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.