குடும்ப அரசியல் என்பது இந்தியாவிற்கு எப்போதும் புதிதல்ல. அது தேசிய கட்சியாகட்டும், மாநிலக் கட்சியாகட்டும் அல்லது லெட்டர் பேடு கட்சியாகட்டும். அனைத்திலுமே குடும்ப அரசியல் உண்டு.

அந்த வகையில், தென்னிந்திய அரசியலில் ஜுலை 4ம் தேதி சில குறிப்பிடத்தக்க சம்பவங்கள் நடந்துள்ளன.

அதாவது, இரண்டு முக்கிய கட்சிகளில் மூன்றாம் தலைமுறைக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மிக முக்கியமான கட்சியான திமுகவில், மூன்றாம் தலைமுறையைச் (கருணாநிதி – ஸ்டாலின் – உதயநிதி) சேர்ந்த உதயநிதிக்கு இளைஞரணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேநாளில், கர்நாடகாவின் ஒரு முக்கிய பிராந்தியக் கட்சியான மதசார்பற்ற ஜனதா தளத்தில், மூன்றாம் தலைமுறையைச் (தேவகெளடா – குமாராசாமி – நிகில்) சேர்ந்த நிகில் குமாரசாமிக்கு கர்நாடக யுவ ஜனதா தள் (அக்கட்சியின் இளைஞரணி) தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தேவகெளடா ஏற்கனவே தனது மகன்கள் ரேவண்ணா மற்றும் குமாரசாமி தவிர பிறரை அரசியலுக்கு கொண்டுவர மாட்டேன் என்றவர். ஸ்டாலினும் முன்பு விகடன் பத்திரிகைக்கு அளித்திருந்த பேட்டியில், தன் குடும்பத்திலிருந்து யாரையும் அரசியலுக்கு கொண்டுவரும் எண்ணமில்லை என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், தற்போது இரண்டு வாக்குறுதிகளுமே காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. தேவகெளடாவின் குடும்பத்தைப் பொறுத்தவரை, அவரின் குடும்பத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் அரசியலில் இருக்கிறார்கள். ஸ்டாலின் குடும்பத்தை அதனோடு ஒப்பிடமுடியாது என்றாலும், அவரது மருமகன் சபரீசனின் அரசியல் செயல்பாடு அனைவரும் அறிந்ததே.

உதயநிதிக்குப் பொறுப்பு கொடுத்ததை இன்னும் சற்று தாமதப்படுத்தியிருக்கலாம் என்கின்றனர் கட்சியின் சில மூத்த நிர்வாகிகள். மக்களவைத் தேர்தலில் பெரிய வெற்றிபெற்றாலும், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் சறுக்கியுள்ளோம். எனவே, கவனமுடன் செயல்பட வேண்டியுள்ளது என்றனர்.