சென்னை:
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், தேமுதிக எந்த கூட்டணியில் சேருவது என திமுக, அதிமுக தலைமைகளிடம் கண்ணாமூச்சி ஆடி வந்த நிலையில், தற்போது தெருவில் நிற்கிறது.
ஏற்கனவே திமுக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி உறுதி செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்பட்ட நிலையில், தேமுதிகவின் கோரிக்கைகளை அதிமுக ஏற்க மறுத்து வருவதால், கூட்டணிக்காக மீண்டும் திமுகவை கதவை தட்டியது. ஆனால், திமுகவோ முடியாது என்று கைவிரித்து விட்டது.
ஒரே நேரத்தில் திமுக மற்றும் அதிமுக தலைமைகளிடம் தேமுதிக அரசியல் கண்ணாமூச்சி ஆடியது பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டணி தொடர்பாக தேமுதிகவினர் தன்னிடம் பேசியதாக துரைமுருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த தேமுதிக துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் இன்று செய்தியாளர்களை சந்திப்பை நடத்தினார். அப்போது, துரைமுருகன் மீது கடுமையாக சாடினார். திமுக தலைமை குறித்து துரைமுருகன் கூறியதை அரசியல் நாகரிகம் கருதி வெளியிட விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக பொருளாளர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் எல்.கே.சுதீஷ் கேள்வி குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு எப்போதும் போல நக்கலாக பதில் அளித்த துரைமுருகன், தனிப்பட்ட முறையில் என்னோடு பேசுவதற்கு எதுவும் இல்லாத நிலையில் என்னை ஏன் தேமுதிக நிர்வாகிகள் சந்தித்தார்கள்? என்று பதில் கேள்வி எழுப்பினார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், தேமுதிகவினர் பேச வந்து குறித்து, துரைமுருகன் அப்படி சொல்லியிருக்க கூடாது என்று சுதீஷ் சொன்னாரே என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த துரை முருகன், அவங்களே நொந்து போயிருக்காங்க, பாவம் சார், நான் புண்படுத்த விரும்பவில்லை என்றும், தேமுதிமுகவினரை மேலும் அசிங்கப்படுத்த விரும்பவில்லை என்று நக்கலாக கூறினார்.
தற்போது கட்சி தலைமை நிர்பந்தம் காரணமாகவே சுதீஷ் மாற்றிப் பேசி வருகிறார் என்றும் தெரிவித்தார்.