சென்னை: தன்னிடம் ரூ.2000 கோடி பேரம் பேசினார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார். இது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.2000 கோடி பேரம் பேசியதை வேண்டாம் என்று விட்டுவிட்டு தமிழக அரசியல் களத்தில் தனித்து போட்டியிடுகிறோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
மறைந்த எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்றைக்கு தமிழனின் வீரம் பெருமளவு எடுபடவில்லை என்று கூறியதுடன், தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு உலக நாடுகளுக்கு செல்லமுடியாமல் இருக்கிறேன் என்றவர், வியர்க்காமல் விளையாட முடியாது, விமர்சனம் இல்லாமல் வளரமுடியாது. விமர்சனத்தை தாங்க முடியாதவன் விரும்பியதை அடைய முடியாது.
நமக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு என்பது அரசியல் விடுதலைதான். நாம் தனித்து போட்டியிடுவது என்பது தனிச்சிறப்பு அல்ல. தனித்துவத்துதோடு போட்டியிடுகிறோம் என்பது தான் சிறப்பு என்றவர், தமிழக அரசியல் களத்தில் தனித்து நிற்பவர்கள் நாம் மட்டுமே என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் . நாம் மக்களை நம்புகிறோம், எனவே அவர்களுடன் சேர்ந்து நிற்கிறோம் என்றார்.
தொடர்ந்து பேசியவர், நாம் அரசியலுக்கு வந்து இத்தனை ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிட்டு வருகிறோம். நாம் யாருடனும் தேர்தல் கூட்டணி வைப்பது இல்லை, பேரம் பேசுவது இல்லை என்றவர், கூட்டணி வைக்க நினைத்தால் வாங்கலாம் என சூசகமாக கூறினார்.
ரூ.200 கோடியை விட்டுவிட்டு வருவது பெரியது என்றவர், நாம் ரூ.2000 கோடி பேரம் பேசியதை விட்டுவிட்டு களத்தில் நிற்கிறோம். நம்மிடம், எவ்வளவு பேர் எத்தனை சீட் தருகிறோம் என்று பேரம் பேசியிருப்பார்கள், உங்களுக்குத் தெரியாதா? என கட்சியினரை பார்த்து கேட்டார்.
நாம் திரள் நிதி திரட்டும்போது, அதை பிச்சை எடுப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், பிச்சைக்காரர்களுக்கு நலத்திட்டம் செய்ய பிச்சை எடுக்கிறார்கள் என விமர்சித்தவர், 1 சதவீதம், 2 சதவீதம் இருப்பவர்களுக்கு இவ்வளவு மார்க்கெட் இருக்கும் போது 8 சதவீதம் இருக்கும் எங்களுக்கு எவ்வளவு மார்க்கெட் இருக்கும்?
ஒருவாரம் படம் ஓடிய நடிகருக்கே அவ்வளவு மார்க்கெட் என்றால் 100 நாட்களுக்கு மேலாக தனித்துவமாக நடித்தவர்களுக்கு எவ்வளவு மார்க்கெட் இருக்கும் தெரியுமா?
ரஜினியை சந்தித்ததை பற்றி பேசுகிறார்கள். ரஜினியும் நானும் சந்தித்துக் கொண்டால் இவர்களுக்கு என்ன பிரச்னை. உங்களை கேட்டுத்தான் சந்திக்க வேண்டுமா? நீங்கள் (தி.மு.க.) மட்டும் பிரதமரை காலையில் தந்தையும், மாலையில் மகனும் சந்தித்தீர்களே? என சாடியதுடன்,
நாட்டை யார் ஆள்வார்கள் என்பதை என் தமிழ்ச் சொந்தங்கள் நகர்த்திவிட்டு, கடந்துவிட்டு செல்ல மாட்டார்கள். எப்படியும் இந்த நாட்டை நாங்கள் ஆள்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
சீமானின் 2 ஆயிரம் கோடி பேரம் தமிழக அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறி உள்ளது.