தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 57 கி. மீ தொலைவில் உள்ள திருச்செந்தூரில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் இருக்கும் காயாமொழி என்னும் ஊரில் அமையப்பெற்றுள்ளது.
முற்காலத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் பெரிய கொடிமரம் பின்னம் அடைந்ததால், அதனை அகற்றிவிட்டு புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது. கொடிமரம் நிறுவத் தேவையான மரத்தை வெட்டி எடுத்து வர திருச்செந்தூரில் இருந்து ஒரு குழுவினர் ஆறுமுகம் ஆசாரி என்பவர் தலைமையில் புறப்பட்டு மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பொதிகை மலைக்குச் செல்கின்றனர். அங்கு அவர்கள் கொடிமரம் நிறுவத் தேவையான செழுமையாக வளர்ந்திருந்த சந்தன மரத்தைக் கண்டுபிடித்து அதனை வெட்டி எடுக்க முயற்சி செய்கின்றனர்.
அந்த மரத்தைக் கோடரியால் முதல் வெட்டு போடும் போது, கோடாரி தெறித்துத் துள்ளி மரம் வெட்டச் சென்ற குழுவினர்களுள் பலரையும் காவு வாங்கியது. அதனை கண்டு அஞ்சி நடுங்கிய ஆறுமுகம் ஆசாரி மற்றும் குழுவினர் உயிர் பயம் கொண்டு அலறி அடித்து ஓடுகிறார்கள். அவரை பின் தொடர்ந்து அந்த மரத்தில் குடியிருந்த 21 தேவதைகளும் ஆதாளி சத்தம் போட்டுக் கொண்டே அவர்களை துரத்தி வர, ஆசாரி மற்றும் குழுவினர் ஒருவழியாகக் காரையார் மலைப்பகுதியில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலுக்குள் ஓடி வந்து தஞ்சம் அடைந்து சாஸ்தாவை பணிந்து நிற்கின்றனர்.
அங்கே சொரிமுத்து அய்யன் தோன்றி, அவர்களுக்கு அருள்புரிந்து. என் சகோதரனாகிய முருகப்பெருமானின் கோட்டைக்குக் கொடிமரம் நிறுவும் நோக்கில் வந்த உங்களது முயற்சி நிச்சயம் வீண் போகாது எனக் கூறி, அங்கு அவர்களை ஆதாளி போட்டுக்கொண்டு பயமுறுத்தித் துரத்தி வந்த 21 தேவதைகளையும் அழைத்து, நீங்கள் குடியிருந்த மரத்தை வெட்டியதால் ஏற்பட்ட கோபத்தினால் தான் இவர்களை துரத்தி வந்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிந்து கொண்டேன்.
‘நீங்கள் குடியிருக்க என் கோவிலில் இடம் தருகிறேன். அதற்க்கு கைமாறாக நீங்கள் அனைவருமே இந்த மரத்தை என் தம்பி குடியிருக்கும் திருச்செந்தூர் கோட்டைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என ஆணையிடுகிறார்.
நீங்கள் என் கோவில் எல்லைக்குள் நிலையம் கொண்டால், என்னை நாடி வரும் என் பக்தர்கள் உங்களையும் பூஜித்து உங்களுக்குப் படையல் பூசை போடுவார்கள் எனக் கூறிட, அந்த இருபத்தியொரு தேவதைகளும் அவர் உத்தரவை ஏற்று சுடலைமாட சுவாமி தலைமையில் திருச்செந்தூருக்கு கொடிமரத்தை கொண்டு வர, அவர்களை பின் தொடர்ந்து வெள்ளைக் குதிரையில் சாஸ்தாவும் வந்தார்.
அப்படி வந்த சாஸ்தா தற்போது இந்தக் கோவில் அமையப்பெற்றுள்ள செம்மண் சூழ்ந்த தேரி பகுதிக்கு வரும்போது அந்த இடம் பிடித்துப் போய் விட, அங்கிருந்த கற்குவா மரத்தடியில் சில காலம் நிலை கொண்டாராம். பின்னர் அவ்வூரில் வசித்து வந்த நிலக்கிழார் ஒருவரின் கனவில் தோன்றி, தான் விரும்பி வசிக்கும் கற்குவா மரத்தடி இடத்தை உணர்த்தி தனக்கு ஒருகோயில் எழுப்பிப் பூஜித்து வர உத்தரவு இடுகிறார். மேலும் தனக்கு காட்டும் கோவிலில் நித்யவாசம் புரிந்து உன்னையும், உன் ஊர்மக்களையும் காத்து அருள்புரிவேன் என அருள்வாக்கு தருகிறார். அதன்படி அந்த நிலக்கிழார், அப்பகுதியை ஆண்ட சிற்றரசன் உதவியுடன் சாஸ்தாவுக்கு இந்த கோவிலைக் கட்டியதாக வரலாறு கூறப்படுகிறது.
கற்குவா மரத்தின் மேல் அய்யன் விரும்பி அமர்ந்ததால் கற்குவாமேல் அய்யனார் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவிக் கற்குவேல் அய்யனார் என்ற பெயர் நிலைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
முற்காலத்தில் இந்தத் தேரிக்குடியிருப்பு பகுதியை அதிவீர பாண்டியன் என்ற அரசன் ஆட்சி செய்து வருகிறான். மன்னன் ஆளுகைக்கு உட்பட்ட கோட்டை பகுதியில் ஒரு அழகான சுனையும், அந்தச் சுனையின் அருகில் ஒரு மாமரம் இருந்தது. ஒரு நாள் அந்த வழியாக வனயாத்திரை மேற்கொண்ட முனிவர் ஒருவர் அந்தச் சுனையில் இறங்கி தாகசாந்தி செய்து கொள்ளும் பொருட்டு தண்ணீர் குடித்து மகிழ்கிறார்.
அப்போது அந்த மாமரத்தில் இருந்து நன்கு பழுத்த மாங்கனி ஒன்று சுனைக்குள் விழ, அதனை எடுத்துக் கொண்ட முனிவர் கோட்டைக்குச் சென்று மன்னனை சந்தித்து தான் கொண்டு வந்த கனியைப் பரிசாக வழங்கினார். அந்தக் கனியை உண்ட மன்னன் அதன் ருசியில் மயங்கி, முனிவருடன் அது போன்ற மற்றோரு பழம் கிடைக்குமா எனப் பணிந்து கேட்க, முனிவரோ மன்னா இந்தப் பழம் உன் கோட்டைக்குள் இருக்கும் சுனை அருகே உள்ள மரத்தில் இருந்து விழுந்தது தான், நான் தண்ணீர் அருந்தும் பொருட்டு சுனைக்குள் இறங்கிய பொழுது இந்தக் கனி என் கையில் கிடைத்தது நான் அதனை தான் உமக்குப் பரிசாக வழங்கினேன் என்று கூறி அருளாசிகள் செய்துவிட்டு அங்கிருந்து விடைபெற்றுச் செல்கிறார்.
மன்னனும் அதனை கேட்டு மகிழ்ச்சியுடன் முனிவரை வழியனுப்பி வைத்து விட்டுத் தனது கோட்டை எல்லைக்குள் இருந்த அந்த மாமரத்தை சென்று பார்த்தான். அவன் உண்ட கனியின் சுவை காரணமாக அந்த மரத்தில் இருந்து கிடைக்கும் கனியைத் தான் மட்டுமே உண்ணும் பொருட்டு, அந்த மா மரத்தைச் சுற்றி தன காவலர்களை நிறுத்திக் காவல் காக்க செய்கிறான். காவலர்களும் மன்னனின் ஆணைப்படி அங்குக் காவல் புரிந்து, மாங்கனி பழுத்து விழும் தருவாயில் மன்னனிடம் தெரிவித்து மாங்கனியை மன்னனிடம் ஒப்படைத்து வந்தார்கள்.
இப்படி இருக்கையில் ஒருநாள் நன்கு பழுத்திருந்த மாங்கனி ஒன்று மரத்தில் இருந்து காணாமல் போயிருந்தது. மன்னனின் கோட்டை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாழும் மக்கள் இந்த சுனையில் இருந்து குடிநீர் எடுத்துச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். அந்தப் பகுதியில் வாழ்ந்த பேச்சி தாய் என்னும் பெண்ணொருத்தி வழக்கம் போலச் சுனைக்கு சென்று குடத்தில் தண்ணீர் நிரப்பும் போது, எதிர்பாராத விதமாக அந்த மாங்கனி அவளது குடத்திற்குள் விழுந்து விடுகிறது. இதற்குள் மாங்கனி காணாமல் போன விஷயம் மன்னனின் காதுகளை எட்ட, கடும் கோபம் கொண்ட மன்னன் காவலர்களை மிகவும் கடிந்து கொண்டதுடன், காணாமல் போன மாங்கனியை உடனே கண்டுபிடித்துத் தன்னிடம் கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கிறான். இதனால் அஞ்சி நடுங்கிய காவலாளிகள் மக்களின் வீடுகளுக்குச் சென்று சோதனை இடுகின்றனர்.
அப்போது சுனையில் இருந்து குடத்தில் நீர் எடுத்துத் தனது வீட்டை அடைந்த பேச்சி தாய் தற்செயலாகக் குடத்துக்குள்ள விழுந்திருக்கும் மாங்கனியை கவனித்து அதனை கைகளில் எடுக்க, அரண்மனை காவலர்களும் அங்குச் சோதனையிட வரச் சரியாக இருந்தது. காவலர்கள் பேச்சித்தாய் கையில் இருந்த மாங்கனியை கண்டவுடன் அவளே மாங்கனியை திருடியிருக்க வேண்டும் என முடிவு செய்து அவளை கைது செய்து மன்னர் முன் கொண்டு நிறுத்துகின்றனர்.
ஆத்திரத்தில் புத்தியிழந்த மன்னனும் முறைப்படி நடந்தவற்றை விசாரிக்காமல் அந்தப் பெண்ணிற்கு மரண தண்டனை வித்தித்து விடுகிறான். அந்தப் பெண் எவ்வளவு மன்றாடிக் கேட்டும் மன்னன் மனம் இறங்கவில்லை. மன்னனின் உத்தரவுப் படி அவளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் தருவாயில், பேச்சித்தாய் சுற்றி நின்றோர் மத்தியில் அந்த மன்னனை நோக்கி, நான் செய்யாத தப்புக்கு எனக்குத் தண்டனை அளிக்கும் உன் அரசாட்சி அழிந்து போகட்டும் என்றும் அந்த இடம் முழுவதும் செம்மண் மழை பொழிய கடவது என்றும், அதற்குத் தான் வணங்கும் கற்கு வேல் அய்யனாரே சாட்சி என்றும் கூறி சாபமிட்டுவிட்டு தன உயிரைத் துறக்கிறாள்.
இங்குக் கார்த்திகை மாதம் நடைபெறும் கள்ளர் வெட்டு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அன்று இங்குக் கூடும் கூட்டத்தில் எள்ளு போட்டு எள்ளு எடுக்க முடியாது என்று இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
கார்த்திகை மாதம் முதல் நாள் கொடியேற்றம் ஆகி விசேஷ பூஜைகளுடன் ஆரம்பமாகும் இந்த விழா, கார்த்திகை மாதம் கடைசி மூன்று நாட்கள் வெகு கோலாகலமாக நடைபெறும். சில வருடங்களில் கார்த்திகை மாதம் 30 நாட்களுக்குப் பதிலாக 29 நாட்கள் மட்டுமே அமைந்துவிட்டால், அடுத்த நாளான மார்கழி முதல் நாள் கள்ளர் வெட்டு திருவிழா நடைபெறும். கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் முப்பது நாட்களும் கோயிலில் பகல் நேரத்தில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறும். கள்ளர் வெட்டு திருவிழா நடைபெறும் நாள் அன்று பகலில் இளநீர் ஒன்றின் மேல் பாகத்தை லேசாகச் சீவி, அதன் மீது குங்குமத்தை தடவி, வெள்ளைக் கயிற்றால் சுற்றி கட்டி கற்குவேல் அய்யனாரின் பாதத்தில் வைத்துப் பூஜைகள் செய்கிறார்கள்.
கள்ளர் வீட்டில் பயன்படுத்தப்படும் வன்னியராஜா சுவாமியின் அரிவாளை கொண்டு வந்து பூசாரிகள் கொடுக்க, அதுவும் சாமி பாதத்தில் வைக்கப்படும். இதில் இரண்டு குழுவினராகப் பிரிந்து சாமி கொண்டாடிகள் ஆடி வருவார்கள். ஒருவர் கள்ளர் சாமி குழுவினர், மற்றவர்கள் காவல் தெய்வம் வன்னியராஜா குழுவினர். மேல தாளம் முழங்க இந்தக் குழுவினர் திருக்கோவில் வளாகம் முழுவதும் சாமி ஆடிக்கொண்டே சுற்றி வர, கோயிலின் எதிரே உள்ள கடைகளில் இருந்து சில பொருட்கள் களவு செய்யப்படும். இந்த நிகழ்ச்சிக்கு ‘எடுப்பு எடுத்தல்’ என்று பெயர். இந்த எடுப்பு எடுத்தல் நிறைவு பெற்ற பின்னர், கோயிலில் இருந்து சுவாமி பக்கத்தில் வைக்கப் பட்ட இளநீரை பூசாரிகள் கைகளில் ஏந்தியபடி எடுத்து வருவார்கள்.
அதேபோல வன்னியராஜா சுவாமியின் அரிவாளையும் சாமிகொண்டாடி எடுத்து வரத் தேரிக்காட்டில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் அந்த இளநீர் வைக்கப்படும். அப்போது வன்னியராஜா சார்பாக அரிவாளை எடுத்து வரும் சாமிகொண்டாடி அருளாவேசம் வந்து இளநீரை இரண்டாக வெட்டிச் சாய்ப்பார். அப்போது மேலே தடவப்பட்ட குங்குமம் பட்டு இளநீர் ரத்தம் போல மண்ணில் சிதறும். இதுவே கள்ளர் வெட்டு திருவிழாவின் சிகர நிகழ்ச்சி ஆகும்.
இளநீர் தண்ணீர் சிதறிய மண்ணை எடுத்துக் கொண்டு தங்கள் வயலில் சேர்த்தால் அந்த வருடம் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடையே நிலவுவதால், கள்ளர் வெட்டு முடிந்த அடுத்த நொடி அந்த மண்ணை எடுக்கப் பக்தர்கள் கூட்டம் குமிந்து விடும். இதுவே இந்தக் கள்ளர் வெட்டு திருவிழாவின் சிறப்பம்சம் ஆகும்.