ண்டன்

பிரிட்டன் பிரதமர் தெரசா மே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைப்பில் இருந்து விலக பிரிட்டன் தீர்மானம் செய்தது. அதற்காக பொதுமக்களின் கருத்தை கோரி சென்ற வருடம் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையினர் வெளியேற ஆதரவு அளித்தனர். அதனால் பிரிட்டன் பிரதமர் தெரசா மே தலைமையிலான அரசு வரும் மார்ச் 29க்குள் இதற்கான நடவடிக்க்கைகள் எடுக்க முடிவு செய்தது.

அதை ஒட்டி பிரிட்டன் பாராளுமன்றத்தின் ஆதரவு கோரி நடந்த வாக்கெடுப்பில் வெளியேற எதிர்ப்பு தெரிவித்து 432 வாக்குகளும் ஆதரவாக 202 வாக்குகளும் கிடைத்தன. இது தெரசா மேவுக்கு பின்னடைவு என கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து தெரசா மே மீது பிரிட்டன் எதிர்க்கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார்.

சுமார் 4 மணி நேர விவாதத்துக்குப் பின் நடந்த வாக்கெடுப்பில் தெரசா மேவுக்கு ஆதரவாக 325 வாக்குகளும் எதிராக 306 வாக்குகளும் கிடைத்தன. ஆகவே 19 வாக்கு வித்தியாசத்தில் தெரசா மே வென்றதாக அறிவிக்கப்பட்டார். பிரிட்டனில் கடந்த 26 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பிரதமர் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும்.

பிரிட்டன் பிரதமர் தெரசா மே அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வெற்றி அடைந்துள்ளது. நமக்கு பிரக்சிட் (ஐரோப்பிய கூடமைப்பில் இருந்து வெளியேறுவது) தீர்மானத்தை நோக்கி புதிய அணுகுமுறைக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் மற்றொரு தீர்மானத்துடன் நான் திங்கள் அன்று நாடாளுமன்றம் வருகிறேன்.

நான் அந்த சமயம் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். பிரிட்டன் மக்கள் பிரக்சிட் தீர்மானத்தை வரவேற்கின்றனர். ஆகவே நாம் அனைவரும் சுய லாபத்தை கருத்தில் கொள்ளாமல் ஆவன செய்ய வேண்டும். நமக்கு என்ன தேவை என்பதும் தேவை இல்லை என்பதும் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிந்து விட்டது.

தற்போது நமது ஒற்றுமை மிகவும் முக்கியமாகும். நாம் ஒன்றிணைந்து நமது பாராளுமன்றத்துக்கு என்ன தேவை என்பதை அவசியம் செயலாற்ற வேண்டும். இந்த ந்டவடிக்கைகளுக்காக நான் அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளேன்” என தெரிவித்தார்.