சென்னை: அதிமுகவில் பூகம்பம் ஏற்பட்டாலும் ஏற்படலாம் ஆனால் எந்த பிளவும் ஏற்படாது என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை ஓட்டேரி பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கிய அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுகவில் தொடரும் உட்கட்சி மோதல், செயற்குழு, எம்எல்ஏக்கள் சென்னை வர அழைப்பு போன்றவை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது,
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று மேலும், பரவாமல் இருப்பதற்கு அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது, பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அதிமுகவின் செயற்குழுவில் அரசு கொடுக்கப்பட்ட வழிமுறைகளை கடைபிடித்து தான் செயற்குழு கூட்டத்தை நடத்தினோம், ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் அதனை காரணம் காட்டி கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கூறுகிறார். தமிழகத்தில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் இருக்கின்றன. தற்போது உள்ள அபாய காலங்களில் கூட்டத்தை தவிர்ப்பதன் மூலம் நோய்த் தொற்றைத் தடுக்க முடியும் என்பதற்காக அரசு எடுத்த முடிவுதான், கிராம சபை கூட்டம் ரத்து அறிவிப்பு. ஆனால் எனக்கு சட்டம் கிடையாது என ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். அவரது செயல் எப்படி ஜனநாயகத்தில் சரியாக இருக்கும் என்று கேள்வி எழுப்பினார். தமிழக மக்களுக்காக தான் இந்த சட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது. அந்த சட்டங்களை மதிப்பதில் தான் சிறந்த எதிர்க்கட்சிகளின் கடமையாக இருக்க முடியும். எனவே ஸ்டாலின் தடையை மீறி செயல்பட்டது குற்றம் குற்றமே என்றும் அவர் தெரிவித்தார்.
வரும் 6ம்தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு வரவேண்டும் என்ற தகவல் தவறானது. அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதனால் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி, எதிரிகள் துரோகிகள் குளிர்காய வேண்டும் என்று நினைக்கின்றனர். அது நிச்சயம் நடைபெறாது. அதிமுகவில் நடக்கும் நிகழ்வுகள் சரியாகிவிடும். மக்களை பொறுத்தவரை மீண்டும் அதிமுக ஆட்சிதான் வேண்டும் என நினைக்கின்றனர். எனவே பூகம்பம் ஏற்பட்டாலும் ஏற்படலாம் ஆனால் அதிமுகவில் எந்த பிளவும் ஏற்படாது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.