டில்லி,

நாடு முழுவதும் இன்னும் 2 லட்சம் கிராமங்களில் கழிப்பறை வசதி இல்லை என்று ஆய்வு முடிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மோடி தலைமையிலான ஆட்சிக்கு வந்தபிறகு, திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்கும் விதமாக தூய்மை இந்தியா என்ற திட்டத்தின் மூலம் மக்களிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கழிப்பறை வசதி குறித்த புள்ளி விவரங்களை மத்தியஅரசு வெளியிட்டு உள்ளது.

அதில் 25 சதவீதம் அதாவது ஏறக்குறைய 2 லட்சம் கிராமங்களில் உள்ள  வீடுகளில் கழிப்பறைகள் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

மத்திய அரசின் குறிக்கோள்படி 2019 ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திறந்த வெளியில் மலம் கழிப்பதை முடிவுக்கு கொண்டு திட்டமிட்டுள்ளது.

இதற்காக நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை முடுக்கி விட்டுள்ளது. கழிப்பறை இல்லாத  வீடுகளிலும் கழிப்பறை அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட அறிக்கையின் வாயிலாக இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மாநிலங்களில் இருந்த  பெறப்பட்ட தகவல்களின்படி, 6,05,828 கிராமங்கள் திறந்த வெளியில் மலம் கழிக்காத கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதே சமயம் 2,00,959 கிராமங்களில், 52,593 கிராமங்கள் 100 சதவீதம் கழிப்பறை கொண்ட கிராமங்களின் பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் கூறி உள்ளது.

இதற்காக அனைத்து மாநில அரசுகளும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது