டில்லி

கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட் போட்டுக் கொண்டோருக்கு ரத்தக்கட்டு ஏற்படும் அபாயம் ஏற்படுவது இல்லை என நிதி அயோக் உறுப்பினர் வி கே பால் தெரிவித்துள்ளார்.

கொரோனா மீண்டும் அதிக அளவில் பரவி வருகிறது.  இதையொட்டி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.  தற்போது இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.  முதல் கட்டத்தில்  சுகாதார ஊழியர்கள், மற்றும் கொரோனா முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தற்போது இரண்டாம் கட்டமாக 60 வயதைத் தாண்டியோர் மற்றும் 45 வயதைத் தாண்டி இணை நோய் உள்ளோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.   அடுத்த கட்டமாக வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.

இந்தியாவில் இரு மருந்துகளுக்கு அவசரக்கால அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.  அவை  ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா கண்டுபிடித்து இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் இந்தியாவின் பாரத் பயோ டெக் கண்டுபிடித்து தயாரிக்கும் கோவாக்சின் ஆகியவை ஆகும்.1

இந்நிலையில் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் ஒரு சிலருக்கு ரத்தக்கட்டு ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் பரவியதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.  இது குறித்து நிதி அயோக் சுகாதாரப்பிரிவு உறுப்பினர்  வி கே பால் நேற்று  செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “கோவிஷீல்ட் போட்டுக் கொண்ட யாருக்கும் ரத்தக் கட்டு ஏற்பட்டுள்ளதாக எவ்வித தகவலும் இல்லை.   குறிப்பாக இந்தியாவில் அதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை.  எனவே அதிக அளவில் மக்கள் தடுப்பூசி போட முன் வர வேண்டும்.  தடுப்பூசியால் இது போல எவ்வித அபாயமும் இல்லை. மாறாக இங்கிலாந்து மற்றும் பிரேசிலின் உருமாறிய கொரோனா தொற்றையும் இவ்விரு தடுப்பூசிகள் எதிர்க்கின்றன” எனத் தெரிவித்தார்.