சென்னை:

மிழகத்தில் மே 3 ஆம் தேதி வரை  ஊரடங்கில் எந்தவித தளர்வும் கிடையாது என்று தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனால், 20ந்தேதிக்கு பிறகு, கொரோனா வைரஸ் தாக்கத்தைத் தொடர்ந்து மாநில அரசுகள் சில தளர்வுகளை அறிவிக்கலாம் என மத்தியஅரசு நெறிமுறைகளை அறிவித்தது.

ஆனால், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கொரோனா தொற்று தற்போது தீவிரமாகி உள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே  ஊரடங்கு விதிகளில் தளர்வு இல்லை  என்று டெல்லி,  ப​ஞ்சாப், கர்நாடக மாநிலங்கள் முடிவு செய்துள்ளது. மேலும், கொரோனா தீவிரமாகி வரும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மேற்குவங்க மாநிலங்களிலும் தளர்வு அளிக்க அந்த மாநில அரசுகள் விரும்பவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், தமிழகஅரசு அமைத்த நிபுணர் குழுவினரும் ஊரடங்கு தொடர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில், மே 3ந்தேதி வரை ஊரடங்கு தொடரும், எந்தவித தளர்வும் இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழகம் தேவைப்படுவதால், இப்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மே 3 வரை தொடரும்; நடைமுறையில் உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நிபுணர் குழுவின் ஆலோசனையைப் பெற்ற பின்னர் மேலும் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக இன்று காலை தலைமைச் செயலகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு தளர்வு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, தமிழகஅரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.