சென்னை: விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அளித்த பேட்டி சர்ச்சையான நிலையில், அவருக்கு திமுக மட்டுமின்றி விசிகவிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில், விசிக தலைவர் திருமாளவன் விளக்கம் அளித்துள்ளார்.
இதனால் திமுக, விசக உறவில் எந்தவொரும் விரிசலும் இல்லை என்றவர், ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுப்பது பற்றி உயர்மட்ட குழுவினருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என கூறி, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளிக்க விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தவருக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைக்கும் போது, 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைக்கக் கூடாதா?இ மேலும் வட மாவட்டங்களில் விசிகவின் ஆதரவு இல்லாமல் திமுகவால் வெற்றி பெற முடியாது. அந்த அளவிற்கு வாக்கு வங்கியை வைத்திருக்கிறது என்றார்.
இந்த பேச்சு தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது திமுக தரப்பை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் திமுக விசிக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவின. ஏற்கனவே விசிக ஏற்பாடு செய்துள்ள மதுஒழிப்பு மாநாடு, திமுக அரசுக்கு எதிரானது என்று விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆதவ் அர்ஜூனா ஓப்பனாக பேசியிருப்பது மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது, கடந்த பல ஆண்டுகளாக திமுக விசிக கூட்டணி சுமூகமாக சென்று கொண்டிருக்கும் கூட்டணியில் விரிசல் விழுந்து விடுமோ? என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், விசிக துணைப்பொதுச் செயலாளர், ஆதவ் அர்ஜுனா பேச்சிற்கு திமுக எம்.பி ஆ.ராசா பதில் தெரிவித்திருந்தார். அப்போது, இது அரசியல் முதிர்ச்சியற்ற பேச்சு என ஆதவ்அர்ஜுனாவை விமர்சனம் செய்தார். மேலும் பல திமுக தலைவர்களும் மறைமுகமாக விமர்சித்தனர்.
இதற்கிடையில் ஆதவ் அர்ஜூனா பேச்சுக்கு விசிகவின் உள்ளேயும் எதிர்ப்பு கிளம்பியது. திமுக ஆதரவாளரான விசிக எம்.பி. ரவிக்குமார், வன்னிஅரசு போன்றோர் ஆதவ் அர்ஜுனா பேச்சை கண்டித்தனர். இது அவரது தனிப்பட்ட விமர்சனம் என்றனர்.
இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், திமுக – விசிக ஆகிய கூட்டணி கட்சிகளுக்கு இடையில் எந்தவித சலசலப்பும் இல்லை. விரிசலும் இல்லை. அப்படி விரிசல் உருவாகுவதற்கு வாய்ப்புகளும் இல்லை என்று கூறினார்.
மேலும், என்னுடைய ஊடகப் பக்கத்தில் பதிவான சிறிய வீடியோ. ”ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” என்ற பெயரில் பதிவிடப்பட்டது. இந்த கருத்தை விவாதத்திற்கு பலரும் எடுத்துக் கொண்டனர். அது மேலும் மேலும் விவாதத்திற்கு இடமளித்து விட்டது.
ஆனால், இதன் காரணமாக, திமுக மற்றும் விசிக இடையில் எந்தவித சிக்கலும் எழாது என்றவர், ஆதவ் அர்ஜுனா கருத்து குறித்து, கட்சியின் முன்னணி தோழர்கள் உடன் ஆலோசித்து தான் எந்தவித முடிவும் எடுப்போம் என்றவர், இதுதொடர்பாக பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்டோருடன் தொலைபேசி வாயிலாக பேசியிருக்கிறேன். மீண்டும் கலந்து பேசி அதுதொடர்பான முடிவுகளை எடுப்போம் என்று தெரிவித்தார்.
திருமாவளவனின் இந்த அறிவிப்பு காரணமாக, திமுக விசகி இடையிலான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.