டெல்லி:

பணமதிப்பிறக்க அறிவிப்பு தொடர்பாக ஆர்டிஐ சட்டப்படி கேள்வி கேட்கும் பொது நல வாதிகளுக்கு தெரியாது.. இல்லை…இது தகவல் இல்லை… என்ற ஒரே பதில்களை திரும்ப திரும்ப கூறி வருவதாக பிரதமர் அலுவலகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பணமதிப்பிறக்க அறிவிப்பு தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கிடைத்த பதில்கள் விபரம்:
பணமதிப்பிறக்க அறிவிப்பு வெளியிடுவதற்கு முன் இது குறித்து முடிவெடுக்க ஆலோசனை பெறப்பட்ட அதிகாரிகளின் பெயர் விபரம் அலுவலக பதிவேடுகளில் இல்லை. முதன்மை பொருளாதார ஆலோசகர், நிதியமைச்சர் ஆகியோரது ஆலோசனை பெறப்பட்டத்தா? என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேள்வி ‘தகவல்’ பட்டியலில் கீழ் வரவில்லை என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.

பணமதிப்பிறக்க அறிவிப்புக்கு முன்னாள் எதுவும் கூட்டங்கள் நடத்தப்பட்டதா? ரூ. 500, 1000 ஆகியவற்றை பிரச்னை இன்றி மாற்றிக்கொள்ள முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
புதிதாக 2000 ரூபாய் நோட்டுக்களை வைக்க ஏ.டி.எம்.களில் மாற்றம் செய்ய வேண்டும் என்பது கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதா? அதிகாரிகள் அல்லது அமைச்சர் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்களா? என்றும் கேள்வி கேட்கப்பட்டது.

காலாவதியான ரூபாய் நோட்டுக்களை புதிய நோட்டுக்களாக மாற்ற எதுவும் கால அவகாசம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா? என்ற இது போன்ற கேள்விகளுக்கு இவை ‘தகவல்’ பட்டியலின் கீழ் வரவில்லை என்று தெரிவித்துள்ளது பிரதமர் அலுவலகம்.

இதேபோன்ற பதிலை தான் ரிசர்வ் வங்கியும் தெரிவித்துள்ளது. எந்த ஒரு தனிப்பட்ட தகவலும் பதிவேடுகள், ஆவணம், இ.மெயில், கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகுறிப்பு, சுற்றறிக்கை, உத்தரவுகள், ஒப்பந்தம், அறிக்கை, காகிதம், மாதிரி, அனைத்து விதமான மின்னணு தகவல்கள் போன்றவை மக்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படலாம் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வருகிறது.

ஆர்டிஐ முன்னாள் கமிஷனர் சைலேஷ் காந்தி கூறுகையில், ஆலோசனை செய்யப்படடிருப்பது என்பது ஆவண பதிவாக இருக்க வேண்டும் என்பது கிடையாது. அது ஆர்டிஐ வரம்புக்குள் தான் வருகிறது என்றார்.

பணமதிப்பிறக்க அறிவிப்புக்கு பிறகு மக்கள் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா?, பணமதிப்பிறக்க அறிவிப்புக்கு முன் எவ்வளவு புதிய 2000, 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டது போன்ற கேள்விகளை நிதி அமைச்சகத்தில் பொருளாதார விவகார துறைக்கு பிரதமர் அலுவலகம் மாற்றம் செய்துள்ளது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.