சென்னை:
தஞ்சை மாவட்டத்தில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டவிவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திருவள்ளுவர் நாத்திராக இருக்க வாய்ப்பே இல்லை என்று சர்ச்சை புகழ் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்து உள்ளார்.
தஞ்சை மாவட்டம் வல்லத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலை கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று இரவு சாணம் வீசி அவமதிக்கப்பட்டிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் – வல்லம் சாலையில் அமைந்திருக்கும் பிள்ளையார் பட்டி என்ற ஊரில் அமர்ந்த நிலையில் திருவள்ளுவர் சிலை ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிலையின் மீது கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு யாரோ மாட்டுச் சாணத்தை வீசிச் சென்றிருந்தனர். சிலையின் முகத்திலும் கழுத்துப் பகுதியிலும் சாணம் வீசப்பட்டிருந்தது. இதைக்கண்ட அந்தப் பகுதி மக்கள், சாணம் பூசியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்திருக்கும் காவல்துறை, சிலையை அவமதித்தவர்களைத் தேடி வருகிறது.
திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரம், தமிழ் ஆர்வலர்களை வெகுண்டெழ செய்துள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகளும் இந்த அவமதியாதைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திருக்குறளின் உள்ளார்ந்த கருத்தை பார்க்கும்போது, திருவள்ளுவர் இந்துமதப் பற்றாளராகத்தான் இருப்பார் என்றும், அவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறி உள்ளார்.
அமைச்சரின் இந்த பேச்சு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.