சென்னை: அரசு பணியின்போது முறைகேடு காரணமாக டிஸ்மிஸ் செய்யப்படும் ஊழியர்களுக்கு பணப்பலன் கிடையாது என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இது அரசு ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரசு ஊழியர்களின் விடுப்புக்கான பணப்பலன் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, அரசு பணியில் இருக்கும்போது, முறைகேடு மற்றும் பிரச்சினைகள் காரணமாக, டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்கள், ஓய்வு நிறுத்தி வைக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு விடுப்புக்கான பணப்பலன் வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களான ஜாக்டோ, ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றுவது தொடர்பாக அறிவிப்பார் என எதிர்பார்த்திருந்த அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ‘பள்ளிக் கல்வியில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள், 60 வயது வரை பணியாற்றலாம்.’தொடக்கக் கல்வி, தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு என, தனி இயக்குனரகம் செயல்படும். நிதி நிலை சரியானதும் மற்ற அறிவிப்புகள் வரும்’ என்றார்.
எதிர்பார்த்த அறிவிப்புகள் வராததால், மாநாட்டில் முதல்வர் பேசும்போதே, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டம் கூட்டமாக கலைந்து சென்றனர். இது தொடர்பான வீடியோக்களும் வைரலானது. ஜாக்டோ – ஜியோவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு படுதோல்வி அடைந்து விட்டதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த நிலையில், தமிழகஅரசு அரசு பணியின்போது டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பணப்பலன் கிடையாது என அறிவித்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.