சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வேலுமணி மீதான குற்றச்செயல்களுக்கு ஆதாரம் உள்ளது என்று தெரிவித்து உள்ளது.
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன. இதையடுத்து, திமுக ஆட்சி பதவி ஏற்றதும், எஸ்.பி.வேலுமணி வீடு, அலுவலகம், அவரது சொந்தபந்தங்கள், நெருங்கிய கட்சி நிர்வாகிகள் என பலரது வீடு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
அவர்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், வருமானத்திற்கு அதிகமாக 58.23 கோடி ரூபாய் சொத்து சேர்த்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையினர் 59 இடங்களில் சோதனை நடத்தினர். 3928 சதவீதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலுமணி அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. இந்த சோதனையில் 11.153 கிலோ தங்கம், 118.506 கிலோ வெள்ளி, கணக்கில் வராத 84 இலட்சம் ரூபாய் பணம், கைப்பேசி, வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக்கணினி, ஹார்ட் டிஸ்க்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கிரிப்டோ கரன்சிகளில் 34 இலட்சம் ரூபாய் முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர்மீது டெண்டர் முறைகேடு, சொத்துக்குவிப்பு என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதை எதிர்த்து எஸ்.பி.வேலுமணி தரப்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு போடப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் தமிழகஅரசு பதில் மனுத்தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில், இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான வழக்குகளின் விசாரணை நிறைவடைந்து விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், அவர்மீதான குற்றச்சாட்டுங்களுக்கு ஆதாரங்கள் உள்ளன, அவர் மோச குற்றங்களை செய்துள்ளார். அவர், வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார் என்றும் தெரிவித்து உள்ளது.
மேலும், சென்னை மாநகராட்சியில் 114 கோடி மதிப்பு ஒப்பந்த பணியில் 29 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தவறான வழியிலும், சட்டத் திற்கு புறம்பாகவும் எஸ். பி. வேலுமணி செயல்பட்டதாகவும் தமிழக அரசு அந்த மனுவில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்,எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்திலும் தாக்கல் செய்ய தலைமை நீதிபதி ரமணா அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான அறிக்கையை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் 3 வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,வழக்கையும் ஒத்தி வைத்துள்ளது.