ராஜஸ்தான் மாநில பா.ஜ.க.வில் பிளவு.. -அசோக் கெலாட் தகவல்

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

சச்சின் பைலட் தலைமையில் சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளதால்  வரும் 14 ஆம் தேதி தனது பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையைக் கூட்டியுள்ளார், அசோக் கெலாட்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் என்ற இடத்திலும், சச்சின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.ஆட்சி நடைபெறும் அரியானாவிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புதிய திருப்பமாக ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 18  பேர் குஜராத் மாநிலத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பாதுகாப்பான இடத்தில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து நேற்று பேட்டி அளித்த அசோக் கெலாட்,’’ மூன்று, நான்கு இடங்களில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். பா.ஜ.க. எதற்காகக் கவலைப்படுகிறது என்று தெரியவில்லையே’’ என குறிப்பிட்டார்.

‘’பா.ஜ.க.வில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது’’ என்று தெரிவித்த அசோக் கெலாட்’’காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி நடந்ததால், அவர்களை ஜெய்சால்மரில் தங்க வைத்துள்ளோம்.’’ என்று கூறினார்.

‘நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் வெல்வோம். சத்தியம் வெல்லும்’’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

-பா.பாரதி.