ஐதராபாத்,
ஜிஎஸ்டி அமல்படுத்தும்போது, தொடக்கத்தில் பிரச்சினை இருக்குத்தான் செய்யும் என்று மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு கூறினார்.
ஜூலை 1ந்தேதி முதல் நாடு முழுவதும் ஒரே வகையான வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி அமல் படுத்தப்பட இருக்கிறது. ஜிஎஸ்டி குறித்த விழிப்புணர்வு கூட்டத்தை நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஐதராபாத் வந்த மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு, செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நடைபெற உள்ள மிகப்பெரிய வரி சீர்திருத்தம் ஜிஎஸ்டி. இந்த சீர் திருத்தம் வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.
இந்த வரிமுறையால் தொடக்கத்தில் சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், ஊழலுக்கும், பொருளாதார பாகுபாடுகளுக்கும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முற்றுப்புள்ளிவைக்கும் என கூறினார்.
மேலும், அதேநேரத்தில் நீண்ட கால நோக்கில், பொருளாதாரத்தில் மிகப்பெரிய நன்மையை இது அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். பண வீக்கம் கட்டுப்பட்டு, பொருட்களின் விலை குறையும் என்றும், இதன் மூலம், வணிகர்கள் அதிக பலன்களைப் பெறுவார்கள் என்றும் வெங்கைய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.