டெல்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்து கண்காணிக்கப்பட வேண்டிய பயணிகளின் எண்ணிக்கையிலும், உண்மையான எண்ணிக்கையிலும் இடைவெளி இருப்பதாக அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கபா கூறியிருக்கிறார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது. 24000 பேர் இந்த வைரசால் பலியாகி இருக்கின்றனர். இந்தியாவிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந் நிலையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்து கண்காணிக்கப்பட வேண்டிய பயணிகளின் எண்ணிக்கை, உண்மையான எண்ணிக்கை இரண்டுக்கும் இடைவெளி உள்ளது என்று அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கபா கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எங்கள் முயற்சிகளை தீவிரமாக பாதிக்கக்கூடும், இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொடர்பான சோதனை செய்தவர்களில் பலர் சர்வதேச பயண வரலாற்றைக் கொண்டுள்ளனர்.
மொத்தம் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட சர்வதேச பயணிகளின் விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டு உள்ளன. தொற்று நோய் பரவாமல் தடுக்க அவர்கள் நெருக்கமான கண்காணிப்பில் வைக்கப்படுவது முக்கியம்.
சுகாதார அமைச்சகம் இதை பலமுறை வலியுறுத்தியதுடன், இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
அமைச்சக வழிகாட்டுதல்களின்படி அத்தகைய பயணிகளை உடனடியாக கண்காணிப்பில் வைக்க ஒருங்கிணைந்த, நீடித்த நடவடிக்கை அவசரமாக எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டு உள்ளார்.