கொசுக்களே இல்லை.. ஆனால் 8 பேருக்கு டெங்கு! இது நீலகிரி சோகம்!

ஊட்டி:

லைப்பிரதேசமான ஊட்டியில் கொசுக்கள் கிடையாது. ஆனால் அங்கும் 8 பேர் டெங்கு காய்ச்ச லால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிரட்டி வருகிறது. தினசரி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இதுவரை 100க்கும் மேற்பட்டோல் பலியான சோகம் நடந்தேறி உள்ளது.

இதன் காரணமாக டெங்கு ஒழிப்பு பணியில் அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மூழு மூச்சுடன் ஈடுபட்டு வருகின்றன.

பொதுவாக மலைப்பிரதேசங்களில் உள்ள தட்ப வெப்ப நிலை காரணமாக கொசுக்கள் உயிர்வாழ முடியாது. ஆனால்,  நீலகிரி மாவட்டத்தில் 8 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஊட்டி அரசு மருத்துவமனையில் 3 பேரும், பந்தலூர் அரசுமருத்துவமனையில் 3 பேரும், குன்னூர் அரசு மருத்துவமனையில் 2 பேரும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதைத்தொடர்ந்து  மருத்துவக்குழுவினர் கிராமம் தோறும் சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள். காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே ஆஸ்பத்திரிக்கு வருமாறு பொதுமக்களுக்கு மருத்துவக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொசுக்களே இல்லாத நிலையில் டெங்கு பாதிப்பு எப்படி வந்தது என்பது குறித்து  மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ரகுபாபு, ஸ்ரீதர் ரவிக்குமார், சிரியன் ஆகியோர் கூறியதாவது:-

மாவட்டத்தில் நிலவும் சீதோஷ்ண நிலையில் கொசுக்கள் வாழமுடியாது. பஸ், ரெயில், கார் உள்ளிட்ட வாகனங்களில் கொசுக்கள் வந்தாலும் சிறிது நேரத்தில் தட்பவெப்ப நிலைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்து விடும்.

இங்கிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, மைசூரு, பெங்களூருவில் வேலை செய்து வருகிறார்கள். அங்கு தங்கியிருக்கும்போது அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக அவர்கள் சொந்த ஊர் திரும்பியபோது அவர்களுக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க தேவையான டமின் புளு மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 8 பேருக்கும் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
English Summary
There are no mosquito .. but 8 patients admitted for dengue! This is the Nilgiri tragedy!