கோவில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள புகழ் பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் மக்கள் வழிபடும் உற்சவர் கந்தர் சிலை, போலியானது என்பது தெரிவந்துள்ளது.
இந்த நிலையில் அந்த உற்சவர் சிலையை மாற்ற கோவில் நிர்வாகம் எடுத்த முடிவையும் பக்தர்கள் எதிர்த்து வருகிறார்கள்.
இந்த கந்தர் சிலை, 1993-ம் வருடமே காணாமல் போய்விட்டது என்ற அதிர்ச்சி தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
இது குறித்து பக்தர்கள் கூறுவதாவது:
“சில மாதங்களுக்கு முன் உற்சவர் சிலையை மாற்ற வேண்டும் என்று கோவில் குருக்கள் தரப்பில் மனு அளித்திருந்தார்கள். பழைய சிலை சேதமடைந்துவிட்டது. நாங்கள் கொண்டு வந்த புதிய சிலையை வைக்க வேண்டும் என்று சொல்லி வந்தார்கள். ஆனால், பழைய கந்தரை சரி செய்ய என்ன செலவு ஆகுமோ அதை தருகின்றோம் என்று பக்தர்கள் தெரிவித்தார்கள்.
ஆனால் இந்து சமய அறநிலைத்துறையும், கோவில் நிர்வாகத்தினரும் சேர்ந்து புதிய சிலைக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள். பழைய சிலையின் அளவை எடுத்து தஞ்சாவூரில் புதிய சிலை செய்யும் பணியைத் துவங்கினார்கள்.
ஆனால் இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தோம். சிலை சேதமாகியுள்ளது என்று சொல்லப்பட்டதால், மூத்த ஸ்தபதி முத்தையா அந்த சிலையை ஆய்வு செய்தார்.
அப்போது, அவர், இது உண்மையான சிலை கிடையாது. போலி” என்று சொன்னார். இது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
உடனே, பாரதி என்பவர் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் கேட்ட தகவலின்படி, 1993-ல் உண்மையான கந்தர் சிலை காணாமல் போனதாகவும், சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வழக்கு இருப்பதாகவும் பதில் வந்தது.
ஆனால், சிலை காணாமல்போன விஷயம் பக்தர்களுக்கு தெரியாதபடி மறைக்கப்பட்டு, ஆண்டுதோறும் ராஜவீதியில் பிரமோற்சவம் நடந்து வருகிறது. ஒவ்வொரு பிரம்மோற்சவத்தின் போதும் காணாமல் போன தங்க சிலைக்கு பதிலாக வெண்கல சிலையை வைத்து கோவில் நிர்வாகமும் அர்ச்சகர்களும் உற்சவம் நடத்தி பக்தர்களை ஏமாற்றி வருகின்றனர். காவல் நிலையத்திலும், சிலை காணாமல் போனதற்கான எப்.ஐ.ஆர். நகலை கொடுக்க மறுத்து வருகிறார்கள்.
ஏற்கனவே இதே கோயிலில் இரண்டு பஞ்சலோக சிலைகள் காணாமல்போய் உள்ளன. . சாமியின் வைரக்கற்களும் தற்போது காணாமல்போய் உள்ளது தெரிய வந்திருக்கிறது. இப்போது தங்கத்தால் ஆன கந்தர் சிலை காணாமல் போனது தெரியவந்திருக்கிறது” என்கிறார்கள்.
கோவில் நிர்வாகத்தினரிடமோ அர்ச்சகர்களிடமோ இது குறித்து தகவல் கேட்டால் பதில் இல்லை.
ஏகாம்பரநாதர் கோயிலில் தொடர்ந்து விலை மதிப்பான சிலைகள் ஆபரணங்கள் திருடு போய்க்கொண்டே இருப்தும், காணாமல் போன சிலை பற்றி நிர்வாகம் மறைத்திருப்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது.
ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடுடைய முதல்வர் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பக்தர்களின் விருப்பம்.
- மகிழன்