சென்னை: நாகை மாவட்டம் பொறையார் ஆனந்தமங்கலம் கோயிலில் இருந்து 1978ஆம் ஆண்டு திருடப்பட்ட இராமர், சீதா, லட்ஷ்மணர் சிலைகள். இங்கிலாந்தில் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் தமிழகம் திரும்பும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ளது அனந்தமங்கலம். இந்த கிராமத்தில் அமைந்துள்ளது ராஜகோபாலசாமி கோவில் ராமாயணத்துடன் தொடர்பு உடையதாக கருதப்படுகிறது. இங்கு காணப்படும் ராமர், லட்சுமணர், சீதா தேவி சிலைகளுடன் மூன்று கண்கள் மற்றும் 10 கைகளுடன் அனுமன் காட்சி தரும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும். இதுபோன்று அனுமன் காட்சி தரும் கோவில் வேறு எங்கும் இல்லை என்பதும் சிறப்புக்குடையது.
இந்த கோவில் குறித்த ஸ்தல வரலாற்றில், ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதாவை கண்டுபிடிக்க, ராமபிரானின் கட்டளையை ஏற்று இலங்கை செல்லும் அனுமன், கடலில் பதுங்கி இருந்த இரு அரக்கர்களை அழித்து, அனுமன் ராமபிரானை சந்திக்க திரும்பிக் கொண்டிருந்தபோது அனந்தமங்கலத்தில் இளைப்பாற இறங்கியதாகவும், அப்போது, அந்த பகுதி இயற்கை அழகுடன் இருந்தைக்கண்டு ஆனந்தம் அடைந்து அங்கிருந்தே ராமரை பூஜித்ததாக கூறப்படுகிறது. எனவேதான் இந்த திருத்தலம் அமைந்துள்ள பகுதி அனந்தமங்கலம் என அழைக்கபடுகிறது.
பிரசித்திபெற்ற இந்த கோவில் உள்ள வெண்கலத்தால் ஆன ராமர், சீதை, லட்சுமணர் மற்றும் அனுமன் ஆகிய 4 சாமி சிலைகள் கடந்த 1978-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி ஒட்டுமொத்தமாக கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விசாரணை நடத்தி காவல்துறையினர் முதல்கட்டமாக 3 பேரை கைது செய்த நிலையில், திருட்டுபோன நகைகளை மீட்க முடியாமல் போனது. அதற்குள் சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டன.
இதன் காரணமாக கிடப்பில் போடப்பட்ட வழக்கு, பின்னர் சிலை கடத்தல் வழக்கை விசாரித்த பொன்மாணிக்க வேல் அணியின் விசாரணையை தொடர்ந்து மீண்டும் சூடுபிடித்தது. இந்த நிலையில், சிங்கப்பூரில் ‘இந்தியா பிரைடு’ (பெருமை மிக்க இந்தியா) என்ற தன்னார்வ நிறுவனம், வெளிநாடுகளில் விற்கப்பட்ட இந்திய கோவில்களுக்கு சொந்த சிலைகளை மீட்டு வருகிறது. இந்த நிலையில், இங்கிலாந்தில் உள்ள ஒரு மியூசியத்தில் பழங்கால ராமர், லட்சுமணர், சீதாதேவி சிலைகள் இருப்பதை கண்டுபிடித்தது. அந்த சிலைகள் தலா 30 கிலோ எடையும், சீதை சிலை 25 கிலோ எடையும் உள்ளதாக தெரிவித்து, சமூக வலைதளங்கள் மூலம் மீட்கும் முயற்சியை மேற்கொண்டது.
இந்தியாவில் உள்ள எந்த கோவிலில் இது போன்ற சிலைகள் காணாமல் போயிருந்தன என்பது குறித்த விசாரணை மேற்கொண்ட ‘இந்தியா பிரைடு’ இயக்குனர் விஜயகுமார், அந்த சிலைகள் தமிழகத்தைச் சேர்ந்தது என்றும், 1978-ம் ஆண்டு அனந்தமங்கலத்தில் உள்ள ராஜகோபாலசாமி கோவிலில் திருடப்பட்டது என்பதையும் உறுதி செய்தார்.
இதுதொடர்பாக புதுச்சேரியில் உள்ள ஆவணக்காப்பகம் ஒன்றில் இருந்த அனந்தமங்கலம் கோவில் சிலைகள் குறித்த புகைப்படங்கள் மூலம் லண்டனில் விற்பனைக்கு உள்ள சிலை, அனந்தமங்கலம் கோவில் சிலைதான் என உறுதியானது.
இதுதொடர்பாக விஜயகுமார், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், லண்டன் சிறப்பு படையினர் உதவியுடன் இங்கிலாந்தில் விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து அந்த சிலைகளை போலீசார் கைப்பற்றி லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்தனர்.
இந்த சிலைகள் விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து சில நாட்களில் அந்த 3 சிலைகளும் தமிழகம் கொண்டு வரப்படும் என தெரிகிறது. அதற்கான முயற்சியில் தமிழக சிலைகடத்தல் தடுப்பு காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அனுமன் சிலை எங்கு உள்ளது என்பதை கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து வருகிறது.
42 ஆண்டுகளுக்கு பின்பு கொள்ளை போன 4 சாமி சிலைகளுள் 3 சிலைகள் மீண்டும் கிடைத்துள்ளதால் இந்த பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்.