லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய் .XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.
தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டீஸர் அதிகம் லைக் செய்யப்பட்ட தென்னிந்தியாவின் டீஸர்/ட்ரைலர் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று மாஸ்டர் திரைப்படம் நேரடியாக தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று (டிசம்பர் 28) திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
” ‘மாஸ்டர்’ படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதி. இன்று காலை தயாரிப்பாளர் எங்களிடம் இதனை உறுதிப்படுத்தினார். ஜனவரி 13-ம் தேதி ‘மாஸ்டர்’ திரைக்கு வரும். இதுவரை விஜய் படங்கள் அனைத்துமே தமிழ் மற்றும் தெலுங்கில் மட்டுமே வெளியாகியுள்ளது. ஆனால், இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது ‘மாஸ்டர்’.
கொரோனா அச்சுறுத்தலால் சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு பெரிய படம் வெளியாகிறது. இதற்கு முழுக்காரணமும் விஜய்தான். கடந்த 10 மாதங்களாகத் திரையரங்குகளில் மட்டுமே வெளியாக வேண்டும் என்ற ஒரே முடிவுடன் இருந்தார் விஜய். அவருக்குத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
விஜய் நினைத்திருந்தால் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டிருக்க முடியும். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. அதேபோல் தயாரிப்பாளர் லலித் குமாருக்கு 200 கோடி ரூபாய் வரையிலான முதலீடு கைக்கு வராமல் உள்ளது. ஆனால், திரையரங்கில்தான் வெளியீடு என்பதில் உறுதியாக இருந்தார். அவருக்கு எங்களது நன்றி.
100% இருக்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். கடந்த 10 மாதங்களாகத் திரையரங்குகள் மூடியிருப்பதால், பெரும் பாதிப்பை அடைந்துள்ளோம். 2021-ம் ஆண்டுத் தொடக்கத்தில் 100% இருக்கைக்கான அனுமதி கிடைத்தால் பெரும் மகிழ்ச்சியடைவோம்.
கடந்த 10 மாதங்களாகப் பெரிய நடிகர்களின் படப்பிடிப்பு எதுவுமே நடைபெறவில்லை. ஆகையால், எந்தவொரு பெரிய படமும் தயாராக இல்லை. பெரிய நடிகர்களை வளர்த்துவிட்டது திரையரங்குகளும், ரசிகர்களும்தான். தன்னை வளர்த்துவிட்ட திரையரங்குகள் நன்றாக இருக்க வேண்டும் என்று விஜய் நினைக்கிறார். அவரைப் போல் ஒவ்வொரு நாயகரும் நினைத்தால்தான் சினிமா வாழும்.
பெரிய படங்கள் ஓடிடியில் வெளியாவதைத் தடுக்க முடியாது. ஆனால், நடிகர்கள் விஜய் போல் நினைத்துப் பார்க்க வேண்டும். ‘மாஸ்டர்’ படத்தை அனைத்து ஓடிடி தளங்களும் போட்டிப் போட்டுக் கேட்டன. ஆனால், திரையரங்கில்தான் வெளியாக வேண்டும் என்பதில் விஜய் தெளிவாக இருந்தார். அவரைப் போல் அனைத்து நாயகர்களும் நினைக்க வேண்டும்.
டிவி, டிவிடி, ஓடிடி என எந்தவொரு தொழில்நுட்பம் வந்தாலும், திரையரங்குகள் நல்ல முறையில்தான் போய்க் கொண்டிருக்கின்றன. விஜய் மாதிரி அனைத்து நடிகர்களும் ஒத்துழைத்தால், தமிழ் சினிமா அடுத்த கட்டத்துக்குப் போய்ச் சேரும். திரையரங்குகள் மீது விஜய் வைத்திருக்கும் அன்பால் மிகவும் நெகிழ்ச்சியடைந்துள்ளோம்”.
இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.