ராமண்ணா வியூவ்ஸ்:

ராமண்ணா
ராமண்ணா

காலம்காலமாக பெண்களை அடிமைப்படுத்தியே வைத்திருந்த நமது சமுதாயத்தில் ராஜாராம் மோகன்ராய், பெரியார், அம்பேத்கர், பூலே போன்ற தலைவர்களால் பெண்கள் அடிமைச் சங்கிலியில் இருந்து மெல்ல மெல்ல விடுபட்டார்கள்.
“அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு” என்று கேட்ட காலம் மலையேறிப்போய், ஆராய்ச்சிப்படிப்புகளும் படித்து தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். விண்வெளி வீராங்கனையாகவும் உயர்ந்து நிற்கிறார்கள்.
ஆனால், பெண்களை அடிமைப்பண்டமாக, வெறும் போகப்பொருளாக பார்க்கும் ஆணிய பார்வை தொடர்ந்து துரத்திக்கொண்டேதான் இருக்கிறது.
தமிழக பாஜகவில் குறிப்பிடத்தக்க தலைவர்களில் ஒருவராய் உயர்ந்து நிற்பவர் வானதி சீனிவாசன். சமீபத்தில் இவர் கோவைக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது, அவரது கட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ரோஜாப்பூவை நீட்டி “ஐ லவ் யூ” என்று சொல்லியிருக்கிறார்.
இதைக் கேட்ட திருமதி. வானதி சீனிவாசன் அதிர்ந்துபோய்.. “என்ன.. என்ன சொல்கிறாய்” என்று கேட்டபோது, மீண்டும் மீண்டும் “ஐ லவ் யூ” என்று சொல்லியிருக்கிறார் அந்த பா.ஜ.க. இளைஞர்.
வானதி சீனிவாசன், விக்கித்துப்போய் நிற்க… அவரைச் சுற்றியிருந்த பா.ஜ.கவினர், அந்த இளைஞரை அடித்து உதைத்து வெளியே தள்ளியிருக்கிறார்கள்.
உண்மையில் ஒரு பெண்மணிக்கு மிக அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம்தான் இது.  ஆனாலும் அதையும் மீறி, தன் தன்னம்பிக்கையை முகநூல் பதிவு மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் வானதி சீனிவாசன்.
13886240_1062556363829963_5522385733354202783_n
அவரது தன்னம்பிக்கை பதிவு இதோ:
“ஊடகங்கள் சிலவற்றில் வந்துள்ள ‘ஒரு ஆடவனின் அநாகரிக நடத்தைப்’ பற்றிய செய்திகள்…
நிறைய அக்கறையான விசாரிப்புகள்..
அரசியலுக்கும் , பொது வாழ்வுக்கும் வரும் நம் சகோதரிகள் இது போன்ற இன்னும் என்ன விதமான அவமானங்களை எல்லாம் தாங்கி, தாண்டி வந்து சமூக மாற்றத்தை நிகழ்த்த வேண்டும் என்பது மிகப்பெரிய சவாலான பணி.
இதற்குரிய வலுவை, மன தைரியத்தை இறைவன் என் சகோதரிகளுக்கு அளிக்க வேண்டிக்கொள்கிறேன்.
“சமுதாயத்தில் இந்த நிலையில் இருக்கும் வானதிக்கே இந்த நிலைமையா? நாமெல்லாம் அரசியலில் நிலைக்க முடியுமா?” ‘பொது வாழ்க்கையில் அச்சமின்றி செயல்பட முடியுமா’ என்ற தயக்கம் பெண்களுக்கு என்றுமே வந்துவிடக் கூடாது என்பதில் நான் மிகவும் உறுதியாக் இருக்கிறேன்.
ஒரு ஆடவனின் அநாகரீக செயலை வைத்து சமுதாயத்தை நிர்ணயிக்க கூடாது என்று ஆயிரம் சகோதரர்கள் நலம் விசாரித்து அக்கறை கொண்டதை வைத்து புரிந்துக் கொள்கிறேன்.
என்றும் எனக்கு உள உறுதியாக இருக்கும் முண்டாசு கவிஞனின் வரிகள்
“தேடி சோறு நிதம் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப் பருவம் எய்தி –
கொடும் கூற்றுக்கு இரையென மாயும்
பல வேடிக்கை மனிதரை போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?” – இப்படி மகாகவி பாரதியின் வரிகளோடு தனது தன்னம்பிக்கை முழக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் வானதி சீனிவாசன்.
பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும், பொதுக் காரியங்களுக்காக போராட வேண்டும் என்பதே பகுத்தறிவு உள்ளோர் அனைவரின் விருப்பம். அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி.
அந்த வகையில் திருமதி வானதி சீனிவாசன் அவர்களின் அரசியல் பயணம் வெற்றிகரமாய் தொடர வாழ்த்துவோம்!