பெங்களூரு:

கர்நாடகாவில் கடந்த 5ந்தேதி நடைபெற்ற 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 10 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிப்பதால், எடியூரப்பா ஆட்சி தப்பித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டு உள்ளது.

224 சட்டமன்ற தொகுதிகளைக்கொண்ட கர்நாடாகாவில், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சி அமைத்தது. குமாரசாமி முதல்வராகவும், காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா துணைமுதல்வராகவும் சேர்ந்து கூட்டணி அமைச்சரவையை நடத்தி வந்தனர்.

ஆனால், காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சி எம்எல்ஏக்களின் பதவி ஆசை காரணமாக,  17 பேர்  தங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்தால், குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் பாஜக ஆட்சி அமைத்தது.

எம்எல்ஏக்கள் ராஜினாமாவை தொடர்ந்து  காலியாக அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிகளில், 15 சட்ட மன்ற தொகுதிகளுக்க  இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில், ஏற்கனவே தங்களது பதவியை ராஜினாமா செய்த ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சி களைச் சேர்ந்தவர்களில் 13 பேர், இந்த தேர்தலில் பாஜக சார்பில் களமிறக்கப்பட்டனர்.

இடைத்தேர்தல் கடந்த 5ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், 10 தொகுதிகளில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

தற்போது பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், பெரும்பான்மை நிரூபிக்க 6 எம்எல் ஏக்கள் மட்டுமே தேவைப்படுகிறது. ஆனால், தற்போது 10 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால், அவரது ஆட்சிக்கு பெரும்பான்மை கிடைப்பதில் சந்தேகம் இல்லை என்று கூறப்படுகிறது.

தற்போதுள்ள  முன்னணி நிலவரம், பாஜகவுக்கு சாதகமாகவே உள்ளது. இதன் காரணமாக, எடியூரப்பா தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்வார் எனத்தெரிகிறது.