வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணி விரைவில் துவங்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் தொலைபேசி எண்கள் மற்றும் ஆதார் எண்களை இணைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் ஆதார் ஆணையத்துடன் (UIDAI ) இதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை தேர்தல் ஆணைய நிபுணர்கள் விரைவில் துவங்குவார்கள் என்று தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

2015ம் ஆண்டு துவங்கிய ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுன் இணைக்கும் பணி உச்சநீதிமன்ற தலையீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இழுபறி நீடித்து வந்தது.

இந்த நிலையில் புதிதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றிருக்கும் ஞானேஷ்குமார் கடந்த சில வாரங்களாக இதில் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.