அவசரத்திற்கு கழிப்பறைக்குக்கூடப் போக முடியாது..  கொரோனா பெண் போராளிகளின் லேப் உலகம்

    

கொரோனா நோய்த் தொற்று காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் உழைத்தவர்கள் என்று காவல்துறை, மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப்பணியாளர்கள், தன்னார்வலர்கள் என்று இனம் கண்டு பாராட்டி வருவது நல்ல விசயம் தான்.  ஆனால் இவர்கள் அனைவருக்கும் மேலாக ஒரு துறையினர் மிகுந்த போற்றுதலுக்கு உரியவர்களாக இருக்கின்றனர்.  அவர்கள் வேறு யாருமில்லை.  நோய்த் தொற்றை உறுதி செய்யப் பெரிதும் காரணமாக இருக்கும் லேப் டெக்னீஷியன்கள் தான்.

“ஒரு நாளைக்கு நாங்கள் தோராயமாக ஆயிரம் சாம்பிள்கள் வரை பரிசோதனை செய்து முடிவுகளை அறிவிக்கிறோம்.  மூன்று ஷிஃப்டுகளாக பணியாற்றி வருகிறோம் நாங்கள்.  மற்ற பணிகள் போல் இல்லை இது.  மிகுந்த அர்ப்பணிப்பும், பொறுமையும் தேவைப்படுகிறது இந்த வேலைக்கு ” என்கிறார் ராம் என்ற டெக்னீஷியன்.

மொத்த பரிசோதனையும் முடியக் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஆகிறதாம்.  “சரியான வரிசை எண்களை அளித்து, ஒரு தொகுப்புக்கு 96 சாம்பிள்களை சோதனைக்கு எடுத்துக்கொள்கிறோம்.  முதலில் RNA-யை வெளிக்கொண்டு வரும் கடினமான பணியினை  மேற்கொள்கிறோம்.   இதனைச் செய்யும் போது நாங்கள் Personal Protective Equipment (PPE) எனப்படும் பாதுகாப்பு உபகரணத்தைக் கட்டாயம் உடுத்தியாக வேண்டும்.  இந்த பகுப்பு மூன்று மணி நேரங்கள் வரை நீடிக்கும்.  பின்னர் இந்த 96 மாதிரிகளும் ஒரு பாசிட்டிவ் சாம்பிள் சேர்க்கப்பட்டு Real Time- PCR மெஷினில் வைக்கப்படும்.  இந்த மெஷின் முடிவுகளைத் தர இன்னொரு மூன்று மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.  இந்த நேரத்தினை வீணடிக்காமல் நாங்கள் அடுத்த தொகுப்பு RNA பரிசோதனைகளை மேற்கொள்ளத் தொடங்குவோம்” என்று இந்த பரிசோதனை முறைகளைப் பற்றி விவரிக்கிறார் ராம்.

 “இந்த பரிசோதனையைச் செய்ய PPE உபகரணத்தைத் தொடர்ந்து ஆறு மணி நேரம் வரை அணிந்திருக்க வேண்டியது கட்டாயம்.  இந்த நேரத்தில் தாகத்திற்குத் தண்ணீர் அருந்தவோ, கழிப்பறை செல்லவோ வாய்ப்பே இல்லை.  இது ஆண்களை விடப் பெண்களுக்கு அதிக சிரமங்களைக் கொடுக்கும்.  அதிலும் மாதவிடாய்  நேரத்தில் பணிபுரியும் பெண்கள் படும் அவஸ்தை விவரிக்க முடியாத ஒன்றாகும்.  எனினும் பணியின் முக்கியத்துவம் அறிந்து   எங்கள் கஷ்டங்களைப் பொறுத்துக்கொண்டு செய்து வருகிறோம்” என்கிறார் கீர்த்தனா.

முகமறியா இந்த கடமை வீரர்களை வணங்குவதுடன், விரைவில் இந்த கொரோனா தொற்று நீங்கி இவர்கள் விடுதலை பெற பிரார்த்திப்போம்.

– லெட்சுமி பிரியா