திருச்சி,
திருச்சி ஐ.ஜி அலுவலகம் அருகே உள்ள டோல்கேட் பாலத்தில், தமிழக காவல்துறையின் பரிதாபங்கள் என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
காவலர்களின் ஒரு பிரிவினர் இந்த போஸ்டர்களை ஒட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இதுபோல் விழுப்புரம் ஆயுதப்படை முன்பும் காவலர்கள் தங்கள் கோரிக்கை போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். ஏற்கனவே கடந்த வாரம் ஒட்டப்பட்ட போஸ்டர் உடனடியாக கிழிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவல்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
போஸ்டர் விவரம்:
மனஅழுத்தம், பணிச்சுமையின்றி இயல்பாக வாழ முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கலாம் வாருங்கள் என காவல்துறையிருக்கு அழைப்பு விடுத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
24 மணி நேர வேலை, தீபாவளி, பொங்கல் ஆகிய முக்கிய விழாக்களில் கூட தங்கள் மனைவி, மக்கள் மற்றும் உறவினருடன் விழாவைக் கொண்டாட முடியாமல் காவல்துறையினர் தவித்து வருகின்றனர்.
8 மணிநேர ஷிப்ட், வார விடுமுறை, சங்கம்… என போஸ்டர் ஒட்டி போலீசார் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஏற்கனவே அதிக பணி சுமை, மன அழுத்தம் காரணமாக, பணியில் இருக்கும்போது அவ்வப்போது காவலர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்கவே போலீஸ் சங்கம் வேண்டும் என்று போலீசாரில் ஒரு பகுதியினிர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து காவல்துறை குடும்பத்தினரும், இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் வகையில் போஸ்டர் அடித்து அழைப்பு விடுத்திருக்கின்றனர்.
அந்த போஸ்டரில் கூறப்பட்டுள்ளதாவது,
•வருடம் முழுவதும் 200 நாட்கள் பணிபுரியும் பிற அரசு துறையினருக்கும், வருடம் 365 நாட்களும்,
24 மணிநேரமும் பணிபுரியும் காவல் துறையினருக்கும் உள்ள ஊதியத்தை முறைப்படுத்தி, கூடுதலாக வழங்குதல்.
•ஒவ்வொரு காவலர்களுக்கும் 8 மணிநேர பணிமுறையை உறுதிசெய்தல்
•வாரத்தில் ஒருநாள் காவல்துறையினர், தங்கள் வீட்டிலுள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க விடுமுறையை உறுதிசெய்தல்
•காவலர்களுக்கு பணியில் ஏற்படும் அழுத்தங்களைத் தவிர்க்க, மன நலம் சார்ந்த பயிற்சி வகுப்புகளை ஊக்குவித்தல், காவலர் நலச்சங்கம் அமைக்க அனுமதி தருதல்
• உயர் காவல் அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு, மற்ற காவலர்களைப் பயன்படுத்தும்’ஆர்டர்லி’ முறையை ஒழித்தல்.
• காவலர் சங்கம் அமைக்க அனுமதி அளித்தல்
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காவல்துறை அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
வரும் 6ந்தேதி சட்டமன்றத்தில் காவல்துறை மானியக்கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற இருக்கிறது. எனவே, அன்று காலை முதல்வரை சந்தித்து மனு கொடுக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த போஸ்டர்களை உயர் அதிகாரிகள் உடனடியாக கிழித்து எறிந்துவிட்டனர். ஆனால், இந்த போஸ்டர் விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.