சென்னை: தமிழ்நாடு 2026 தேர்தலுக்கான விசில் ஊதப்பட்டுவிட்டது என்று தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தற்போதைய நிலையில் 4 முனை தேர்தல் நடைபெறும் நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக தவெக தனி அணியாக போட்டியிடும் நிலை உள்ளது. தவெக கூட்டணிக்கு அழைப்பு விடுத்த நிலையில், இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியில் அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணையவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் தவெகவுடன் கூட்டணி வைக்க ஆசைப்பட்டு வருகின்றனர்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகிறோம் என்ற ஆசையை விஜய் விதைத்துள்ளதால், பல மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள், ஆட்சி அதிகாரம் என்ற போதையில், தவெகவுடன் கூட்டணி வைக்க முயற்சித்து வருகின்றனர். இதற்கு முன்னோட்டமாக, காங்கிரஸ் கட்சியின் தரவுப் பகுப்பாய்வுப் பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, ஏற்கனவே தவெக தலைவரை சந்தித்து பேசியதுடன், திமுக அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதன் காரணமாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வத் தேர்தல் சின்னமாக விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதை வரவேற்று பதிவு போட்டுள்ள பிரவீன் சக்ரவர்த்தி, தனது எக்ஸ் தள பக்கத்தில்,” தமிழ்நாடு 2026 தேர்தலுக்கான விசில் ஊதப்பட்டு விட்டது. இப்போது அனைத்துக் கட்சிகளும் தேர்தல் ஓட்டத்திற்கு தயாராகி விட்டன” என ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.
இது காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
[youtube-feed feed=1]