சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்ட திருத்தம் கடந்த ஆண்டு (2023) இறுதியில் பாராளுமன்றத்தின் இருஅவைகளிலும் நிறைவேறிய நிலையில், குடியரசு தலைவர் முர்முவும் உடனேடியாக ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து அரசிதழில் வெளியிடப்பட்டது.   அதைத்தொடர்ந்து, இந்த 3 புதிய  சட்டங்கள் 2024 ஜூலை1 முதல் அமலுக்கு வந்துள்ளன.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்கள் காலத்திற்கு ஏற்றவாடு மாற்றப்பட வேண்டியது அவசியம் என்பதால், இந்த சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.  ஐபிசி எனப்படும் இந்திய தண்டனை சட்டம், சிஆர்பிசி எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், ஐஇசி எனப்படும் இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவை ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்டவை தற்போதைய காலகட்டத்திற்கு பொருத்தமாக இல்லை. எனவே தான் பிஎன்எஸ் எனப்படும் பாரதிய நியாய சன்ஹிதா, பிஎன்எஸ்எஸ் எனப்படும் பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பிஎஸ்ஏ எனப்படும் பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் தெரிவித்த நிலையில், அதை மீறி, இந்த சட்டங்கள் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளன. ,இந்த புதிய சட்டங்களின்படி, இனிமேல் குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக இருக்கும்.  மேலும், குற்ற வழக்குகளில், டிஜிட்டல் வழியில் ஆவணங்கள் பராமரிக்கப்படும். விரைவாக விசாரித்து வாதங்கள் முன்வைக்கப்படும். ஆயுள் தண்டனையும், மரண தண்டனையும் அதிர வைக்கும் என்கின்றனர்

இந்நிலையில் தான் இன்றைய தினம் (ஜூலை 1) மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இவற்றை நடைமுறைப்படுத்தும் வேலையில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய சட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காவல் நிலையங்களில் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதேசமயம் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். புதிய சட்டங்களை அமல்படுத்துவது ஒரே நாளில் முடிந்துவிடக் கூடிய விஷயமல்ல.

சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய பயிற்சிகள் தேவை. இதையொட்டி 5.65 லட்சம் போலீசார், சிறைத்துறை அதிகாரிகள், தடயவியல் துறை அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 40 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. புதிய சட்டங்கள் தொடர்பாக மாநில அரசுடன் ஆலோசனை நடத்தவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இதற்கிடையில்,  மூன்று சட்டங்களுக்கும் சமஸ்கிருதத்தில் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சட்டங்களில் ஏராளமான பிழைகள் இருக்கின்றன. இரண்டு வெவ்வேறு வகை கொலைகளுக்கு ஒரே தண்டனை இடம்பெற்றுள்ளது. எனவே இந்த சட்டங்களை நிறுத்தி வைக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.