தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை (செப்டம்பர் 26) காலை 10:30 மணிக்கு வழங்கவுள்ளது.
2011 முதல் 2016 வரை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி அவரது உதவியாளர் மற்றும் சகோதரர்களுடன் சேர்ந்து வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணமோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் மீதான விசாரணை 2015ம் ஆண்டு துவங்கிய நிலையில் 2021 ஜூலை மாதம் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இந்த நிலையில் அமலாக்கத்துறையின் சம்மனுக்கு ஆஜராகாத காரணத்தால் 2023 ஜூன் 14ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இருந்து ஜாமீன் கோரிய நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்தது.
இதையடுத்து ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியின் மனுவை விசாரித்த நீதிபதி அபய் ஓகா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பை ஒத்திவைப்பதாக கடந்த ஆகஸ்ட் 12, 2024 அன்று விசாரணையின் முடிவில் கூறியது.
இந்நிலையில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை (செப்டம்பர் 26) காலை 10:30 மணிக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
13 மாதங்களாக தொடர்ந்து சிறையில் இருந்துவரும் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுமீதான தீர்ப்பு நாளை வெளியாக உள்ள நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்க வாய்ப்பு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.