டெல்லி: மத்தியஅரசு கடந்த 2016ம் ஆண்டு அமல்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில், 4 பேர் செல்லும் என அறிவித்துள்ள நிலையில், பெண் நீதிபதி நாகராத்னா ஒருவர் மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு மத்தியஅரசு திடீரென புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இது கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என மத்தியஅரசு கூறினாலும், அதற்கான முன்னேற்பாடுகள் முறையாக செய்யாததால், கடுமையான சர்ச்சைகள் ஏற்பட்டன. பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், பலர் பணம் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்த சோகங்களும் அரங்கேறின.
மத்தியஅரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கின் காரசார விசாரணைகளைத்தொடர்ந்து, இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், பணமதிப்பிழப்பு வழக்கில் அரசியல் சாசன அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. தீர்ப்பில், ‘2016-ஆம் ஆண்டு நவம்பவர் 8ந்தேதி அன்று அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது. ரிசர்வ் வங்கியிடம் ஆலோசனை மேற்கொண்ட பிறகே, மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது. எனவே மத்திய அரசின் நடவடிக்கையில் தவறில்லை. ஆகவே இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது’ என உத்தரவிடப்பட்டது.
பண மதிப்பிழப்பு வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில், நீதிபதிகள் எஸ்.அப்துல் நஸீா், பி.ஆா்.கவாய், பி.வி.நாகரத்னா, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதில், 4 பேர் மத்தியஅரசின் நடவடிக்கை செல்லும் என தீர்ப்பளித்துள்ள நிலையில், நீதிபதி நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளார்.
அவரது தீர்ப்பில்‘, ரிசர்வ் வங்கி சட்ட விதிகளின்படி, மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது. சட்டம் இயற்றியே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும். ரகசியம் தேவையென்றால் அவசர சட்டம் மூலம் கொண்டு வந்திருக்கலாம். நாடாளுமன்றம் என்பது இன்னொரு வடிவம். முக்கியமான நடவடிக்கையில் ஜனநாயகத்தின் மையப்புள்ளியான நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் முடிவெடுக்க முடியாது எனத் தெரிவித்தார்.