கண்டி:
இலங்கை, கண்டி மாகாணத்தில் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இலங்கையின் கண்டி மாகாணத்தில் தேயிலைத்தோட்டங்கள் அதிகமாக உள்ளன. இவற்றில் கூலித்தொழிலாளிகளாக பணி புரிய வெள்ளையர் ஆட்சிகாலத்தில் தமிழகத்திலிருந்து ஏராளமான மக்கள் கொண்டு செல்லப்பட்டனர். எந்தவித உரிமையும் இல்லாமல் கடுமையாக உழைத்த இம் மக்களின் உழைப்பாலேயே தேயிலை வர்த்தகத்தில் இலங்கை முக்கிய இடத்தைப் பிடித்தது.
இந்த நிலையில், இந்திய பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி பதவி வகித்தபோது, இந்த தொழிலாளர்களில் கணிசமானோரை இந்தியாவுக்கு அழைத்துக்கொண்டார். மீதமுள்ள தொழிலாளிகள் தொடர்ந்து இலங்கை தோயிலைத்தோட்டத்திலேயே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வருகிறார்கள்.
அடிப்படை உரிமைகளோ, வசதிகளோ இன்றி வாடும் அந்த லட்சக்கணக்கான தொழிலாளிகள், தங்களது உரிமைகளுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதே போல கண்டியில் உள்ள ஹுன்னஸ்கிரிய எயாபார்க் தோட்ட தொழிலாளர்கள் கடந்த பிப்ரவரி 28 போராட்டத்தைத் துவங்கினர்.
தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் பலர். தங்களது தோட்டங்களை பிரித்து விற்கத் துவங்கியிருக்கின்றனர். இதனால் தோட்டத்தொழிலாளிகள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
ஆகவே, தோட்டங்களை விற்பதற்கு பதிலாக தங்களுக்கு தலா இரண்டு ஏக்கர் குத்தகைக்கு அளிக்கும்படி தொழிலாளர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
மேலும், தொழிலாளர்களுக்கு மாதம் 25 நாட்கள் வேலை வேண்டும், அடிப்படை வசதிகள் வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தும் இந்தப் போராட்டம் துவக்கப்பட்டது.
போராட்டம் உக்கிரமடைந்ததை அடுத்து, அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. இறுதியில், தேயிலைத் தோட்டங்கள் தனியாருக்கு விற்கப்பட மாட்டாது என்றும், தேயிலைத் தொழிலாளிகளின் இதர கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றும் எழுத்துபூர்வமாக அரசு உத்திரவாதம் கொடுத்தது. இதையடுத்து கடந்த மார்ச் 3 ம் தேதி போராட்டம் முடிவுக்கு வந்தது. மேலும் மார்ச் 24ம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அரசு தரப்பில் கூறியபடி பேச்சுவார்த்தை துவங்கப்படவில்லை. இதையடுத்து மீண்டும் தொழிலாளர்கள் போராட்டம் துவங்கியது.
இவர்களது போராட்டத்தை பெரும்பாலான இலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பது கூடுதல் சோகம்.