ரஜினிகாந்த் நடிக்க பா.ரஞ்சித் இயக்க தனுஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் காலா படத்தின் இசை மே 9-ம் தேதி நடைபெறும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். அதைத்தொடர்ந்து இப்படத்தின் ‘செம வெயிட்டு’ என்ற பாடலை படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் இணையத்தில் வெளியிட்டார். இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து, காலா படத்தில் இடம்பெற்றுள்ள 9 பாடல்கள் உருவானவிதம் குறித்த வீடியோ பதிவை படத்தின் இசையமைப்பாளார் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டுள்ளார்
பாடல்கள் உருவான விதம் குறித்து வீடியோ பதிவில் பேசியுள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், “காலா படத்தின் இசையை இரண்டு பிரிவுகளாக பிரித்துக்கொண்டேன். அரசியல் கருத்தியல் உள்ள படத்தில் இசையமைக்க விரும்பினேன். அதை இந்தப் படம் பூர்த்தி செய்துள்ளது. தமிழில் மட்டும் 9 பாடல்கள் உள்ளன. மற்ற மொழிகளில் 8 பாடல்கள் இடம்பெறும்” என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மிகப்பிரமாண்டமான முறையில் நடைபெற இருக்கிறது.