ஞ்சாவூர் அருகே உள்ள அம்மாபேட்டை முடுக்குத் தெருவைச் சேர்ந்தவர், உதயன் என்கிற உதயக்குமார் (30). இவர், அம்மாபேட்டை சந்தைப் பகுதியில் பிராய்லர் கோழி இறைச்சிக் கடை நடத்தி வந்தார். இவர் நேற்று இரவு அவரது கோழிகடைக்கு எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் நின்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் உதயக்குமாரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் அவர் முகம் மற்றும் உடல் பகுதிகளில் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது வழியிலேயே உதயகுமார் உயிரிழந்தார்.
அவரும் அவரது நண்பர் ஒருவரும் அப்பகுதியில் தனித்தனியாக கோழி கறிக்கடை நடத்தி வருகின்றனர். இதில் இருவருக்கும் தொழில் போட்டி இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றிலும் உதயக்குமாருக்கு தொடர்பிருக்கிறது. அத்துடன் டாஸ்மாக் கடையில் மொத்தமாக மதுபானம் வாங்கி, கோழிக்கடையில் வைத்துக்கொண்டு டாஸ்மாக் கடை மூடிய பிறகு, அதிக விலைக்கு விற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இவற்றில் எதனால் இந்தக் கொலை நடந்தது. பழிக்குப் பழி வாங்க இது நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
“குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். விரைவில் பிடித்து விடுவோம்’’ என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முன்னிலையில் நடந்த கொலைச் சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
– லெட்சுமி பிரியா