சென்னை: சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர், வேண்டுமென்றே என்னை தடுத்து வைத்து தாமதப்படுத்தினார், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. வழக்கறிஞர் சுதா கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து மேலிடத்தில் புகார் கொடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை-விமான நிலையத்தில் நுழைவு வாயில்களை நிர்வகிக்கும் டோல்கேட் ஆபரேட்டர் மற்றும் அவரது பயிற்சியற்ற பணியாளர்களால் காட்டப்படும் அடாவடித்தனம் மற்றும் கட்டுக்கடங்காத நடத்தை வெட்கக்கேடானது.
பழம்பெருமைக்குரிய சென்னை-விமான நிலையத்தில் மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஏற்படும் சிரமங்களையும் துன்புறுத்தலையும் ஊடகங்கள் தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
நான், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும், செப்டம்பர்-11 அதிகாலை டெல்லியில் இருந்து திரும்பியபோது, சென்னை-விமான நிலைய டோல்கேட் பணியாளர்களால் இரண்டாவது முறையாக தொல்லைக்கு ஆளானேன்.
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பொது வசதிகளில் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட அரசியலமைப்பு அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர். இருந்தபோதிலும், செப்டம்பர் 11 ஆம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் கட்டுக்கடங்காத மற்றும் பதிலளிக்காத டோல் கேட் ஆபரேட்டர்கள் ஒரு குழு என்னை நீண்ட காலமாக தடுத்து வைத்தனர்.
இதுகுறித்து நான் அவரிகளிடம் கேள்வி எழுப்பிய நிலையில், அவர்கள் காரணம் சொல்ல மறுத்ததுடன், தனது எம்.பி.க்கான அடையாள அட்டையைப் பார்க்க மறுத்து, யாரிடமும் பேச மறுத்தனர். தன்னிடம், வழிப்பறி கொள்ளையர்களைப் போல பணம் கேட்டனர். அவர்களின் மேற்பார்வையாளரும் தொலைபேசியில் அச்சுறுத்தும் விதமாகவும் அவமரியாதையாகவும் ஒலித்தார்.
விமான நிலைய பணியாளர்கள், என்னை வேண்டுமென்றே துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டனர். இத்தகைய துன்புறுத்தலுக்கு நான் உட்படுத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
ஆனால், இந்த முறை கடந்த முறை செய்தது போல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை விடமாட்டேன். இந்த விவகாரத்தை உயர் மட்டத்தில் எடுத்துச் சென்று, இனிமேல், சென்னை விமான நிலையத்தில் பணியாற்றும்ட அனைத்து விமான நிலைய பயனாளர்களுக்கும் நீதியை கொண்டு வர எண்ணுகிறேன்.
விமான நிலையத்தில் உள்ள பார்க்கிங், நுழைவு-வெளியேறும் சிக்கல்கள், வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்டதாகவும், பார்வையாளர்களுக்கு கட்டணம் செலுத்தும் வகையில், மற்றும் ஒப்பந்ததாரர் மற்றும் அவரது ஆட்களின் பயிற்சியற்ற மற்றும் கட்டுக்கடங்காத நடத்தை தொடர்பான அனைத்து புகார்கள் குறித்தும் முறையான விசாரணையை நான் கோருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.