சென்னை:

து குடிப்பவர்கள்,  குடிப்பதை நிறுத்தினால்  அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பதால், மது விலக்கு அமல்படுத்தவில்லை என்று  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புதுக்கருத்தை கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

ஏற்கனவே பாலில் கலப்படம் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை தெரிவித்து, உயர்நீதி மன்றத்தால் மூக்குடைக்கப்பட்டு, வாய் திறக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கடந்த ஆண்டு மது விற்பனையை  நிறுத்தினால் தமிழக மக்களின் உடல் நலம் பாதிக்கப்படும் என்று கூறியவர், தற்போது   குடிப்பவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகத்தான் உடனடியாக முழு மதுவிலக்கு  கொண்டு வரவில்லை என்று கூறி உள்ளார்.

இன்று விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் தமிழக  பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுக கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி என்று கூறினார்.

ராஜகண்ணப்பன் திமுகவுக்கு ஆதரவாக போய்விட்டாரே என்ற கேள்விக்கு,  அவர் வேறு ஒரு கட்சிக்கு ஆதரவு என்று போய்விட்டதால், அதிமுகவுக்கு எந்த இழப்பும் இல்லை. ஒரேயொரு ஓட்டுதான் இழப்பு. வேறு எந்த இழப்பும் கிடையாது என்றும் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் டாஸ்மாக் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர்,  மது குடிப்பவர்கள் உடனே குடிப்பதை நிறுத்தினால், நரம்புத்தளர்ச்சி ஏற்படும். இதனால் அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். மது குடிப்பவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகத்தான், நாங்கள் உடனடியாக முழு மதுவிலக்கையும் கொண்டுவராமல் இருக்கிறோம் என்று கூறினார். இது அதிமுகவினர் மட்டுமின்றி செய்தியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏற்கனவே, கொட நாடு விவகாரத்தில், தன்மீது குற்றமில்லை என்பதை நிரூபிக்க எடப்பாடி நெருப்பில்கூட இறங்குவார்  என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர், அதிமுக என்ற குதிரைமீது எந்த கட்சியும் ஏறி சவாரி செய்யலாம் என்றும், மோடிதான் எங்கள் டாடி என்றும் அநாகரிகமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி மக்களிடம் அதிருப்தியை வளர்த்து கொண்டவர்  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

அமைச்ச ராஜேந்திர பாலாஜியின் பேச்சு சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இவரையெல்லாம் அமைச்சராக பெற்றது தமிழகத்தின் சாபக்கேடு என்று நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.